Times of Puducherry
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் 6 நாள் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய், அங்குள்ள பிரபல சொகுசு ஹோட்டலில் தங்கியுள்ளார். அவர் தங்கியிருக்கும் ஹோட்டல் மற்றும் அதன் ஆடம்பர வசதிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘தி ஷார்ட்’ கட்டிடத்தில் சொகுசு ஹோட்டல்
லண்டன் பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘தி ஷார்ட்’ கட்டிடத்தில், ஷாங்க்ரி-லா தி ஷார்ட் என்ற நட்சத்திர ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டல் கட்டிடத்தின் 34-வது தளம் முதல் 52-வது தளம் வரை அமைந்துள்ளது. ஐரோப்பாவின் உயரமான கட்டிடங்களில் ஒன்றான ‘தி ஷார்ட்’டில் இருந்து தேம்ஸ் நதி மற்றும் லண்டன் நகரின் பல்வேறு பகுதிகளை ரசிக்க முடியும் என கூறப்படுகிறது. ஹோட்டலில் 185 அறைகள், 14 டீலக்ஸ் அறைகள் மற்றும் 3 சிறப்பு எக்ஸிகியூட்டிவ் அறைகள் உள்ளன.
அறைகளில் பல்வேறு சொகுசு வசதிகள்
இந்த நட்சத்திர ஹோட்டலில் உணவகங்கள், திருமண நிகழ்ச்சிகளுக்கான அரங்குகள், தனியார் நிகழ்ச்சிகளுக்கான இடங்கள் மற்றும் நிறுவனங்களின் கூட்டங்களுக்கான அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. அறைகளில் காலநிலை மற்றும் விளக்கு கட்டுப்பாட்டு வசதிகள், தானியங்கி பிளாக்அவுட் திரைகள் உள்ளிட்ட நவீன வசதிகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் வாடகை எவ்வளவு?
முதல்வர் விஜய் தங்கியிருக்கும் இந்த சொகுசு ஹோட்டலில் ஒரு நாள் தங்குவதற்கான கட்டணம், அறையின் வகையைப் பொறுத்து இந்திய மதிப்பில் சுமார் ரூ.96 ஆயிரம் முதல் ரூ.2.70 லட்சம் வரை இருப்பதாக ஹோட்டல் இணையதளத் தகவலை மேற்கோள் காட்டி செய்தி தெரிவிக்கிறது. மேலும், இந்த கட்டிடத்தின் உயரமான தளங்களில் இருந்து லண்டன் நகரை ரசிக்கும் வகையில் உணவகங்கள் மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்ட வசதிகளும் இருப்பதாக கூறப்படுகிறது.
சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தில் விஜய்
இதற்கிடையே, லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய், புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தய மைதானத்திற்குச் செல்ல உள்ளார். அங்கு நடைபெறும் மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை பச்சைக்கொடி காட்டி தொடங்கி வைக்கிறார்.
இந்த பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரும் பங்கேற்கிறார். இந்திய நேரப்படி இரவு 9.45 மணிக்கு தொடங்கும் போட்டி, இரவு 11.45 மணியளவில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 15-ஆம் தேதி லண்டனில் வசிக்கும் தமிழர்களை முதல்வர் விஜய் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.