Times of Puducherry
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை, சட்டமன்ற உறுப்பினர் நேரு என்கிற குப்புசாமி மற்றும் அவருடன் வந்த ஆதரவாளர்கள் மிரட்டும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டி,புதுச்சேரி மாநில அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் மீனவ அமைப்புகள் சார்பில் சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
சட்டப்பேரவை வளாகத்தில் பெண் ஒருவர் மீது பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றதாகவும், அது தொடர்பான விவகாரம் மூடி மறைக்கப்பட்டதாகவும் கூறி எம்.எல்.ஏ. நேரு என்கிற குப்புசாமி தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது சட்டப்பேரவை வளாகத்திற்கு அலுவலக பணிக்காக வந்த பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம், எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் தகாத வார்த்தைகளில் பேசி, மிரட்டும் வகையில் நடந்து கொண்டதாக மீனவ அமைப்புகள் குற்றம்சாட்டின.இதனை கண்டித்து புதுச்சேரி மாநில மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் பல்வேறு மீனவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், எம்.எல்.ஏ. நேரு மற்றும் அவருடன் வந்ததாக கூறப்படும் 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்டப்பேரவை விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
தொடர்ந்து, மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் டிஜிபி அலுவலகத்திற்கு சென்று, எம்.எல்.ஏ. நேரு என்கிற குப்புசாமி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் புதுச்சேரி மாநில மீனவர்கள் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என மீனவ அமைப்புகள் தெரிவித்துள்ளன.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.