Times of Puducherry
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த ரூ.3.6 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.1.77 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி ரவி பிரகாஷ் பேட்டி:
கடந்த 2 நாள்களாக நடைபெற்ற தீவிர சோதனையில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் துறையினர் 2.5 கிலோ எடை கொண்ட ரூ.3.6 கோடி மதிப்பிலான தங்க நாணயங்களைப் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், ரூ.1.77 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர 181 லிட்டர் அளவுக்கான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.72 ஆயிரம். விசாரணை பாதிக்கும் என்பதால் மேலும் விவரங்களை இப்போது வெளியிட முடியாது.
தட்டாஞ்சாவடி இடைதேர்தலைப் பொறுத்தவரை 31 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெண்கள் மட்டும் பணியாற்றும் 1 வாக்குச் சாவடியும் அடங்கும். மேலும், 2 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியல் திருத்தம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் பணி தொடர்ச்சியாக நடைபெறுவதுதான். இருப்பினும் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் வாக்காளர் திருத்தப் பணி மீண்டும் தொடங்கியது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 தொகுதிகளிலும் இந்தப் பணியை ஒரு மாதத்தில் முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணியின்போது படிவம் 6 இல் கேட்கப்பட்ட விவரங்களை இப்போது அளிக்கத் தேவையில்லை. பழைய படிவதத்தில் குறிப்பிட்ட விவரங்களை மட்டும் பூர்த்திச் செய்து கொடுத்தால் போதும். மேலும், இதற்காக சிறப்பு முகாம்களை நடத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.