Times of Puducherry
இன்றைய காலகட்டத்தில் பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெறவே அனைவரும் விரும்புகின்றனர். இதற்காக பலர் சந்தையில் கிடைக்கும் அதிக விலை கொண்ட இரசாயன அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், அழகு நிபுணர் கூற்றுப்படி, அனைத்து வகையான செயற்கை அழகு சாதனப் பொருட்களும் எல்லா சருமத்திற்கும் ஒத்துக்கொள்வதில்லை. சில நேரங்களில் அவை ஒவ்வாமை (Allergy) மற்றும் முகப்பருக்களை அதிகரிக்க செய்துவிடும். இதற்கு மாறாக, நமது வீட்டின் சமையலறையிலேயே கிடைக்கும் இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு பக்கவிளைவுகள் ஏதுமின்றி சருமத்தை உள்ளிருந்து பொலிவாக்க முடியும்.
ரோஸ் வாட்டர் – முல்தானி மிட்டி (எண்ணெய் பசை சருமத்திற்கு)
முல்தானி மிட்டி சருமத்தில் உள்ள அழுக்குகளை ஆழமாக உறிஞ்சி எடுக்கும் ஆற்றல் கொண்டது. ரோஸ் வாட்டர் சருமத்தின் pH அளவைச் சீராக வைக்கும்.
தயாரிக்கும் முறை: 2 டீஸ்பூன் முல்தானி மிட்டி உடன் தேவையான அளவு ரோஸ் வாட்டர் சேர்த்து மென்மையான பேஸ்ட்டாக கலக்கவும். முகத்தில் பூசி, காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரால் கழுவவும். இது சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி, முகப்பருக்கள் வருவதை தடுக்கும். வெயிலால் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் கருமையைப் போக்கி சருமத்திற்குப் புத்துணர்ச்சி அளிக்கும்.
கிரீன் டீ ஐஸ் க்யூப் / டீ பேக் (கருவளையம் & கண் வீக்கத்திற்கு)
நீண்ட நேரம் செல்போன், கணினி திரைகளைப் பார்ப்பதாலும், தூக்கமின்மையாலும் கண்களுக்கு கீழ் கருவளையமும் வீக்கமும் ஏற்படுகின்றன.
பயன்படுத்தும் முறை: கிரீன் டீயை கொதிநீரில் ஊறவைத்து, அதைத் ஆற வைத்து குளிர்சாதனப் பெட்டியில் குளிரூட்டவும். பிறகு, அந்த தேயிலைப் பைகளை கண்களின் மீது 10 நிமிடங்கள் வைக்கலாம். (அல்லது கிரீன் டீயை ஐஸ் க்யூப்களாக மாற்றியும் கண்களைச் சுற்றி லேசாகத் தேய்க்கலாம்).
நன்மைகள்: கிரீன் டீயில் உள்ள அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் கேஃபின் (Caffeine) கண் நரம்புகளைச் சீராக்கி, கண் சோர்வு, வீக்கம் மற்றும் கருவளையங்களை உடனடியாகக் குறைக்கும்.
உருளைக்கிழங்கு சாறு (இயற்கை ப்ளீச்சிங்)
உருளைக்கிழங்கில் இயற்கையாகவே சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் மற்றும் ‘கேட்கோலேஸ்’ (Catecholase) எனப்படும் என்சைம் உள்ளது.
பயன்படுத்தும் முறை: உருளைக்கிழங்கைத் துருவி சாறு எடுத்து, காட்டன் பஞ்சு மூலம் முகத்தில் உள்ள கறைகள், கருவளையங்கள் மற்றும் கருமையான பகுதிகளில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரால் கழுவவும்.
நன்மைகள்: முகத்தில் உள்ள மச்சம் போன்ற கறைகள், பருக்களின் வடுக்கள் மற்றும் தழும்புகளை மறைத்து, சருமத்தின் நிறத்தை சமமாக மாற்றும்.
தேன் – கற்றாழை ஜெல் (வறண்ட சருமத்திற்கு)
கற்றாழை தோலுக்கு தேவையான நீர்ச்சத்தைத் தரும்; தேன் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைப் பூட்டி வைக்கும் இயற்கை மாய்ஸ்டரைசராக செயல்படும்.
தயாரிக்கும் முறை: 1 தேக்கரண்டி புதிய கற்றாழை ஜெல்லுடன் 1 தேக்கரண்டி சுத்தமான தேனைக் கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும்.
நன்மைகள்: குறிப்பாக குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியைப் போக்கி, முகத்திற்கு இயற்கையான மினுமினுப்பை தரும்.
தேங்காய் எண்ணெய் – மஞ்சள் (கிருமி நாசினி மற்றும் ஊட்டச்சத்து)
மஞ்சளில் உள்ள ‘குர்குமின்’ (Curcumin) ஒரு சக்திவாய்ந்த கிருமி நாசினி மற்றும் அழற்சி எதிர்ப்புப் பொருளாகும். தேங்காய் எண்ணெய் சருமத்தின் தளர்ச்சியைப் போக்கும்.
தயாரிக்கும் முறை: சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் தூளுடன் சுத்தமான தேங்காய் எண்ணெயைக் கலந்து முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்து கழுவ வேண்டும்.
நன்மைகள்: பாக்டீரியா தொற்றுகளை அழித்து, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, முகத்திற்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும்.
பேட்ச் டெஸ்ட்
இயற்கை பொருட்களாக இருந்தாலும், முகத்தில் முழுமையாகப் பயன்படுத்துவதற்கு முன், உங்கள் கையின் சிறிய பகுதியில் தடவிப் பார்த்து ஒவ்வாமை இல்லையென்பதை உறுதி செய்யவும். தினமும் 3 முதல் 4 லிட்டர் நீர் அருந்துவது சருமத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். இரவு 7- 8 மணி நேர ஆழ்ந்த உறக்கம் சரும செல்கள் புதுப்பிக்கப்படுவதை அதிகரிக்கும்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.