Times of Puducherry
கடந்த சில தினங்களுக்கு முன்பு தருமபுரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், தி.மு.க-வை கடுமையாக விமர்சித்து இருந்தார். குறிப்பாக, கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டில் தி.மு.க-வின் இறுக்கமான அணுகுமுறையால் தான் கூட்டணி உடைந்தது என்றும், கூட்டணியில் இருந்து வி.சி.க வெளியேறியதற்கு 100 சதவீதம் தி.மு.க தான் காரணம் என்றும் தெரிவித்திருந்தார். திருமாவளவனின் இந்த விமர்சனம் தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது.
பதிலடி
இந்த நிலையில் திருமாவளவனின் பேச்சுக்கு தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பதிலடி கொடுத்தார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “வி.சி.க-வுக்கு ஒரு அமைச்சர் கிடைத்ததால் அவர்கள் வேறு கூட்டணிக்கு போயிருக்கிறார்கள். இது தான் உண்மை, இதை யாரும் மறைக்க முடியாது. கம்யூனிஸ்ட் கட்சி கூட த.வெ.க-வுக்கு வெளியே இருந்து ஆதரவு தெரிவித்து அமைச்சர் பதவி வேண்டாம் என்று சொல்கிறார்கள். அதை நீங்கள் சொல்ல வேண்டியது தானே? எதற்கு கூட்டணிக்கு செல்கிறீர்கள். வன்னி அரசு சட்டசபையில் எனக்கு நேராக தான் உட்கார்ந்திருக்கார். அவரும் மரியாதை நிமித்தமாக தினமும் எனக்கு வணக்கம் சொல்வார், நானும் அவருக்கு வணக்கம் சொல்வேன்.
என்னை பொறுத்தவரைக்கும் அங்கே எல்லோரும் எனக்கு சகோதரர்கள் தான். ஆனால், ஒரு பேச்சு என்று வந்தால் அதற்கு பதில் சொல்ல வேண்டியது என் கடமை. அதனால் நான் பதில் சொல்கிறேன். இல்லையென்றால் இதற்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சகோதரர் வன்னி அரசுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது, நீங்கள் கூட்டணி மாறுனீர்கள். இது தான் உண்மை. நீங்கள் விரும்பியது அமைச்சர் பதவி, இதற்காக நீங்கள் சென்றிருக்கிறீர்கள். இதற்கு எதற்கு தேமுதிகவை நீங்கள் இழுக்கிறீர்கள்? தொகுதிகளை முடிவெடுக்க வேண்டியது திமுகவும், அவர்கள் தலைமையும் தான். அப்படி பார்த்தால் உங்களுக்கு எல்லாம் இரண்டு இரண்டு சீட்டு அதிகமாக தான் மு.க.ஸ்டாலின் கொடுத்திருக்கிறார்.
அதனால் நாம் வேறு ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டு அடுத்தவர் மீது குற்றம் சொல்வது மிகவும் தவறான செயல். அதனை திருமாவளவன் செய்ய மாட்டார் என்று நினைக்கிறேன். இனிமேலும் அதை பற்றி பேச மாட்டார் என்று நினைக்கிறேன். அப்படி அவர் திரும்பவும் பேசினால் அதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன். தே.மு.தி.க மீது மட்டும் ஏன் காழ்புணர்ச்சி? அப்படி என்ன தேமுதிகவை பார்த்தால் பயம்? எங்களுக்கு 10 சீட்டு கொடுத்தது ஏன் விசிகவுக்கு கண்ணை உறுத்துகிறது? அதை கூட்டணி தலைமை எடுக்கின்ற முடிவு, அதை கேட்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது” என்று அவர் கூறியிருந்தார்.
அதிரடி விளக்கம்
இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா நாங்கள் தே.மு.தி.க-வை விமர்சித்ததாக எண்ணிக்கொண்டு கருத்துக்களை கூறியிருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறுவதற்கு பதவி ஆசை மட்டுமே காரணம் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். துரோகப் பட்டங்களையும் சூட்டி வருகின்றனர். அவர்களுக்கு விடையளிக்கும் வகையில் நான் திருமண விழா ஒன்றில் பேசும்போது, அதுமட்டும்தான் காரணமா? தி.மு.க-வுக்கும் அன்றைக்கு உடன் இருந்த கட்சிகளுக்கும் இடையிலான உறவு எத்தகையதாக இருந்தது என்பதையும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டாமா என்ற கோணத்தில் கருத்துக்களை சொன்னேன்.
அப்படி காரணங்களை நான் அடுக்குகிறபோது, திடீரென்று தே.மு.தி.க-வை கூட்டணியில் சேர்த்ததும், அதற்கு இடங்கள்—10 இடங்கள் வழங்கப்பட்டது குறித்தும் கூட்டணிக் கட்சிகளுக்கு கசப்பு இருக்காதா என்ற கோணத்திலே நான் கேள்வியை எழுப்பினேன். அவ்வளவுதான். தே.மு.தி.க-வுக்கு 10 இடங்கள் வழங்கியபோது அதை முழுமனதோடு வரவேற்று, அதற்கான காரணங்களையும் விளக்கிய ஒரே கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான்; ஒரே நபர் திருமாவளவன்தான்.
பலரும் அந்த நேரத்தில் தேமுதிகவை திடீரென திமுகவுக்குள்ளே இணைத்துக் கொண்டதை சமூக வலைத்தளங்களில் விமர்சித்தது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை வரவேற்றவன் திருமாவளவன். இன்றைக்கும் நான் ஏன் அவர்களை சேர்த்தீர்கள், எதற்காக அவ்வளவு இடங்களைக் கொடுத்தீர்கள் என்ற கோணத்திலே நான் கருத்து சொல்லவில்லை.
உடனிருந்த கட்சிகளுக்கு திமுகவோடு இருந்த உறவு பாதிக்கப்படுவதற்கு பல காரணிகள் உண்டு என்று நான் சில காரணங்களை அடுக்கியபோது, தே.மு.தி.க-வை தி.மு.க-வுக்குள்ளே திடீரென இணைத்ததும் ஒரு காரணம் என்ற கோணத்தில் கருத்துச் சொன்னேன், அவ்வளவுதான். ஆனால் அவர் நாங்கள் ஏதோ தே.மு.தி.க மீது காழ்ப்புணர்வு கொண்டு விமர்சிக்கிறோம் என்ற கோணத்தில் அவர் கருத்து சொல்லியிருக்கிறார். அவருடைய கருத்து அவருடைய கருத்தாகவே இருக்கட்டும். அதில் நாங்கள் மேற்கொண்டு கருத்துச் சொல்ல விரும்பவில்லை.” என்று தெரிவித்து இருந்தார்.
விளாசல்
இந்த நிலையில் சென்னை வேப்பேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வன்னி அரசு, “தே.மு.தி.க. கடந்த காலங்களில் பா.ஜ.க-வோடு இணைந்து செயல்பட்டவர்கள். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அந்த கூட்டணியா அல்லது இந்த கூட்டணியா என்று இரு பக்கமும் பேரம் பேசியவர்கள்தான் தே.மு.தி.க. தலைவர்கள்.கடைசியாக ஒரு மேல்-சபை எம்.பி. சீட்டுக்காக தி.மு.க. கூட்டணிக்கு வந்தனர். இத்தகைய பின்னணி கொண்டவர்கள், எங்களைப் பார்த்து அமைச்சர் பதவிக்காக கூட்டணி மாறியதாக கூறுவது ஏற்புடையதல்ல. திருமாவளவன் கூறிய கருத்தை அவர்கள் சரியாக உள்வாங்கிக்கொள்ளவில்லை.
நாங்கள் தி.மு.க. கூட்டணியில் நீண்ட காலமாக பயணம் செய்து வந்தோம். இந்தப் பயணத்தில் திடீரென புதிதாக ஒரு கட்சி வருகிறது. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியை விட அவர்களுக்கு அதிகமாக கொடுத்திருக்கிறார்கள் என்பதுதான் தி.மு.க.வோடு எங்களுக்கு ஏற்பட்ட முரண்பாடுகளில் முக்கியமான ஒன்று. இது எங்களை தி.மு.க. எப்படி நடத்தியது என்று சொல்லப்பட்ட உண்மை சம்பவமாகும்.
இதில் தே.மு.தி.க.வை நாங்கள் குற்றம்சாட்டவில்லை. அதை புரிந்து கொள்ளாமல் பிரேமலதா பேசியது, அவரின் அறியாமையைக் காட்டுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் எப்போதும் பதவிக்காக செல்பவர்கள் இல்லை என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஒரு கூட்டணியில் எங்களுக்கான எண்ணிக்கை மற்றும் மதிப்பீடு எவ்வளவு என்று சொல்லும்போது ஏற்பட்ட கசப்பைதான் நாங்கள் வெளிப்படுத்தினோம். அது தே.மு.தி.க. மீதான குற்றச்சாட்டு அல்ல.” என்று அவர் கூறினார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.