Times of Puducherry

கி.ராஜநாராயணன் இலக்கிய விருது வழங்கும் விழா

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
16 Sep 2026 • 9:00 PM
university news

புதுவைப் பல்கலைக்கழகம், சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலமும் கி.ராஜநாராயணன் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய கி.ராஜநாராயணன் இலக்கிய விருது வழங்கும் விழா, தமிழியற்புலத்தின் கருத்தரங்க அறையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழியற்புலத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் இரா. ஸ்ரீவித்யா வரவேற்புரையாற்றினார். புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் சிலம்பு நா. செல்வராசு நோக்குரை நிகழ்த்தினார். தமிழியற்புலத்தின் துறைத்தலைவர் முனைவர் பா. இரவிக்குமார் விழாவில் தலைமையுரையாற்றினார். பிரெஞ்சு பேராசிரியர் முனைவர் சு.அ. வெங்கட சுப்பராய நாயகர், தமிழியற்புலத்தின் பேராசிரியர் முனைவர் கே. பழனிவேலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில், மொழிபெயர்ப்பாளர் புதுவை சீனு தமிழ்மணி விருதாளரை அறிமுகம் செய்து உரையாற்றினார். எழுத்தாளரும் திறனாய்வாளருமான பேராசிரியர் க. பஞ்சாங்கம் அவர்களுக்கு 2026ஆம் ஆண்டிற்கான கி.ராஜநாராயணன் இலக்கிய விருது வழங்கப்பட்டது. சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் இவ்விருதினை வழங்கிச் சிறப்பித்தார்.

எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் 'கி.ராஜநாராயணன் எனும் இலக்கிய ஆளுமை' என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் பேசும்போது, கி.ரா. மக்களின் மொழியைக் கதைகள் வழியாக நமக்குக் கொடுத்திருக்கிறார். மேலும், தூய இலக்கண நடைக்கு எதிரான மக்கள் வழக்கை மொழி அரசியலாக முன்னெடுத்தவர் என்றும், தனது கதைகள் வழியாக விவசாய மக்களின் குரலையும், கரிசல் வட்டார வாழ்வியல் மற்றும் பண்பாட்டையும் தமிழ்ச் சிறுகதைகளில் பதிவு செய்த இலக்கிய ஆளுமை என்றும், எழுத்து, பேச்சு வாழ்க்கை என அனைத்திலும் ஒரே மாதிரியாக வாழ்ந்த நம் காலத்தின் எழுத்துக் கலைஞன் கி.ரா. என்று எழுத்தாளர் கி.ரா.வின் இலக்கிய ஆளுமையை விளக்கிப் பேசினார்.

விழாவின் நிறைவாக, கி.ரா. அறக்கட்டளை நிறுவனர் திரு. புதுவை இளவேனில் நன்றியுரையாற்றினார். முனைவர்பட்ட ஆய்வாளர் திரு. ந. யூசுப் ஷெரிப் விழாவைத் தொகுத்து வழங்கினார். இவ்விழாவில், தமிழியற்புலத்தின் பேராசிரியர்கள், விருந்துநிலைப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top