Times of Puducherry

தட்டாஞ்சாவடி தொகுதியை 20 ஆண்டுகள் வளர்ச்சி இல்லாமல் செய்தவர் முதல்வர் ரங்கசாமி - இரா. சிவா

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
19 Sep 2026 • 7:43 PM
campaign

திமுக வேட்பாளர் சேதுசெல்வம் தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் புடைசூழ தொகுதி மக்களை வீடு வீடாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். பாக்குமுடையான்பேட் பகுதியில் வாக்கு சேகரித்த வேட்பாளர் சேது செல்வம், இன்று காலை தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட தாகூர் நகர் பகுதியில் திமுக அமைப்பாளர் இரா. சிவா தலைமையில் வீடு, வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது வாக்களர்களிடம் பேசிய அமைப்பாளர் இரா. சிவா, பொதுத் தேர்தலில் 2 தொகுதியில் போட்டியிட்டதையும், அப்போதே இடைத்தேர்தலில் அசோக் ஆனந்தனை வேட்பாளராக நிறுத்துவேன் என்று கூறியதையும் முதல்வர் இங்கு பிரச்சாரத்தில் பெருமையாக கூறியுள்ளார். உண்மை காரணம் என்னவென்றால் தனித்து நின்றால் முதல்வர் ரங்கசாமியால் வெற்றி பெற முடியாது. அவருக்கு அசோக் ஆனந்தனின் உதவி தேவைப்பட்டது. அதனால் அசோக் ஆனந்தனை இடைத்தேர்தலில் நிறுத்துவேன் என்று கூறி அவருக்கான வாக்கையும் பெற்றுக் கொண்டார். மேலும் அந்த சமயத்தில் அசோக் ஆனந்தனால் தேர்தலில் நிற்க முடியாத நிலை இருந்தது. அதனால் அசோக் ஆனந்தனும் ரங்கசாமிக்கு பிரச்சாரம் செய்தார். இதுபோன்ற தவறான பின்புலங்களை மறைத்து நியாயஸ்தர் போல் பிரச்சாரம் செய்கின்றனர்.

அசோக் ஆனந்தன் சட்டமன்ற உறுப்பினராகி சட்டமன்றத்தில் பேசி தொகுதியில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமாம், அப்படியெனில் முதல்வரின் தொகுதி என்ற நிலையில் 20 ஆண்டிற்கு மேலாக இருக்கும் தட்டாஞ்சாவடி தொகுதியிலேயே ரங்கசாமியால் வளர்ச்சி ஏற்படுத்தவில்லை என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். அதுபோல் யாருக்கு வாக்கு அளித்தால் நல்லது என்று பார்க்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். இதனை மக்கள் கண்டிப்பாக நினைத்து பார்த்து ஓட்டுப்போட வேண்டும். ஏனென்றால் புதுச்சேரி அரசு சார்பு நிறுவனங்களான பாப்ஸ்கோ, பாசிக் உள்ளிட்ட நிறுவனங்களில் தட்டாஞ்சாவடி தொகுதியை சேர்ந்தவர்கள்தான் பணி புரிந்து வந்தீர்கள். தற்போது அவைகள் மூடப்பட்டுவிட்டதால் வேலையிழந்து இருப்பதும் தட்டாஞ்சாவடி மக்கள்தான். எனவே நமது வேலை வாய்ப்பை பறித்தவர் யார்? அந்த கட்சிக்கு நாம் ஓட்டுப் போட வேண்டுமா? என மக்கள் சிந்தித்து வாக்கு அளிக்க வேண்டும்.

பாப்ஸ்கோ தொழிலாளர்களுக்கு நிலுவை சம்பளம் கிடைக்க உயர்நீதிமன்றம் வரை சென்று போராடிய திமுக வேட்பாளர் சேது செல்வம் வேண்டுமா? அல்லது நிறுவனத்தை மூடி வேலைவாய்ப்பை இழக்கச் செய்து, நிலுவை சம்பளத்தையும் தர மறுத்த கட்சியை சேர்ந்த வேட்பாளர் வேண்டுமா? என சிந்தித்து தட்டாஞ்சாவடி மக்கள் வாக்கு அளிக்க வேண்டும். இந்த ஆட்சிக்கும், முதல்வருக்கும் வலிமை இல்லாததால்தான் மத்திய அரசிடம் இருந்து கேட்டு பெற வேண்டிய பல கோரிக்கைகள் பெற முடியாமலேயே உள்ளது. உண்மையில் புதுச்சேரி மக்களின் அதிகாரத்திற்கு வெற்றி வேண்டும் என்றால் தட்டாஞ்சாவடி தொகுதியில் எதிர்க்கட்சியான திமுகதான் வெற்றி பெற்று, வலிமை பெற வேண்டும். ஏனென்றால் திமுக வெற்றி பெற்று, எதிர்க்கட்சி வலிமை பெற்றால்தான் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் மீது பயம் வரும். அதன் காரணமாக ஒட்டு மொத்த புதுச்சேரி மக்களுக்கும், மாநிலத்திற்கும் என்னென்ன திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்ய முன்வரும்.

இல்லையென்றால் நாம் செல்லும் மக்கள் விரோத பாதைதான் சரி என நினைத்து தமிழ் மொழி புறக்கணிப்பு, இந்தி திணிப்பு, மாநில அந்தஸ்து மறுப்பு, மத்திய அரசு நிறுவனங்களில் புதுச்சேரி இளைஞர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு மறுப்பு போன்ற அனைத்தையும் தொடரும். சேது செல்வம் வெற்றி பெற்றால் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தர போராடுவார். இதனை தட்டாஞ்சாவடி மக்கள் உணர்ந்து நடைபெறும் இடைத்தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு அளித்து தொழிலாளர்களின் உற்ற தோழனும், மக்களின் உற்ற நண்பனும் ஆன திமுக வேட்பாளர் சேது செல்வத்தை வெற்றி பெறச்செய்ய வேண்டும். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top