Times of Puducherry
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவராக வழக்கறிஞர் கதிரவன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக, தேர்தல் அதிகாரியான ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.என். பாஷா அறிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு
மொத்தம் உள்ள 25 உறுப்பினர்களில் 2 நியமன பெண் உறுப்பினர்கள் தவிர எஞ்சிய 23 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்
கடந்த மார்ச் 30-ந்தேதி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 143 வழக்கறிஞர்கள் போட்டியிட்டனர். இதில் பார் கவுன்சில் முன்னாள் தலைவர் அமல்ராஜ் உள்ளிட்ட 23 பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, பார் கவுன்சிலுக்கு பெண் நியமன உறுப்பினர்களாக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற
நீதிபதி வி.எம்.வேலுமணி மற்றும் வழக்கறிஞர் சுதர்சனா சுந்தர் ஆகியோரை நியமித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
எஸ்.ஏ. தர்மாதிகாரி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள், தலைவர் மற்றும் துணைத்தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வேட்புமனு
தாக்கல் இன்று நடந்தது. பிற்பகல் 1 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தலைவர் பதவிக்கு வழக்கறிஞர் கே.கதிரவன், துணைத்தலைவர் பதவிக்கு வழக்கறிஞர் இ.பாலமுருகன், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர்
பதவிக்கு வழக்கறிஞர் பி.எஸ்.அமல்ராஜ் ஆகியோர் மட்டுமே வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இதனால், மூவரும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக, தேர்தல் அதிகாரியான சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா அறிவித்தார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.