Times of Puducherry

ரூ.7 கோடி 'கடல் தங்கம்' படகில் கடத்தல் முயற்சி! நடுவழியில் சுற்றி வளைத்த கடற்படை... நடந்தது என்ன?

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
14 Sep 2026 • 1:56 PM

இலங்கையில் இருந்து தமிழகத்திற்குச் சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான 'அம்பர் கிரீஸ்' (திமிங்கலத்தின் எச்சம்/வாந்தி) தொகையைக் கடற்படையினர் பறிமுதல் செய்து, இது தொடர்பாக இருவரைக் கைது செய்துள்ளனர்.

மன்னார் பகுதியில் உள்ள சௌத் பார் கடற்கரைப் பகுதியில் வடமத்திய கடற்படை கட்டளையகத்தின் கஜபா கப்பல் வீரர்கள் தீவிர ரோந்து மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அங்கு நின்று கொண்டிருந்த 25 மற்றும் 36 வயதுடைய இருவரிடம் கடற்படையினர் விசாரணை நடத்தினர்.

அவர்களது பதிலில் சந்தேகமடைந்த கப்பல் வீரர்கள், அவர்களிடம் இருந்த உடைமைகளைச் சோதனையிட்டனர். அதில், சட்டவிரோதமாகச் சேகரிக்கப்பட்டுத் தமிழகத்திற்குப் படகு மூலம் கடத்தத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த *67 கிலோகிராம் எடையுள்ள அம்பர் கிரீஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட அம்பர் கிரீஸையும் கைது செய்யப்பட்ட இருவரையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.

சர்வதேச சந்தையில் 'கடல் தங்கம்' என்று அழைக்கப்படும் இந்த அம்பர் கிரீஸின் மதிப்பு சுமார் ரூ.7 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது. விலையுயர்ந்த நறுமணப் பொருட்கள் (Perfumes) தயாரிக்கப் பயன்படும் இந்த அம்பர் கிரீஸைக் கைவசம் வைப்பதும், விற்பனை செய்வதும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட குற்றமாகும்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top