Times of Puducherry
பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் திடீரென மாலையில் வானம் கருமேகங்களால் சூழ்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த கனமழையால் பண்ருட்டி நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
பண்ருட்டி நகராட்சி 23-வது வார்டு படைவீட்டம்மன் கோவில் தெருவில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்ற முடியாமல் மக்கள் தவித்தனர்.
நான்குமுனை சந்திப்பு ராஜாஜி சாலை, பஸ் நிலையம், கடலூர் சாலை உள்ளிட்ட பகுதிகள் மழைநீரால் சூழ்ந்தது. கடலூர் சாலையில் உள்ள ரயில்வே சப்-வேயில் மழைநீர் நிரம்பியதால் பொதுமக்கள் அந்த வழியாக செல்ல முடியவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட தெருக்களில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்தனர்.
பஸ் நிலைய வளாகம் முழுவதும் தண்ணீரால் சூழ்ந்ததால் பயணிகள் பஸ்சில் ஏறி இறங்க முடியாமல் அவதிக்குள்ளாயினர். ராஜாஜி சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
மாலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் மற்றும் வேலை முடிந்து வீடு திரும்பிய பணியாளர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர்.
மேலும் நகரின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.