Times of Puducherry

புதுச்சேரியில் டெங்கு நோய் பரவலை தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
16 Sep 2026 • 4:19 PM

புதுவை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்கும் தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் மூலம் மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் யானைக்கால் நோய் போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல சேவைகள் அமைச்சகத்தின் பரிந்துரையுடன் ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை சீசன் துவங்குவதற்கு முன்னர் மற்றும் பின்னர் நாட்டில் நோய்களை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்துவதன் மூலம் இந்த நோய்களை வராமலும், பரவாமலும் தடுக்கலாம். இந்த நோய்களை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை மிகவும் கடுமையாக போராடி வருகிறது.

இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை காரணமாக கொசுக்களால் பரவும் நோய்களான மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, ஜப்பானிய மூளை காய்ச்சல் மற்றும் யானைக்கால் நோய் போன்ற நோய்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சார்பு துறைகளான பொதுப்பணித்துறை, நகராட்சி, பஞ்சாயத்து, புதுச்சேரி நகர அமைப்பு துறை மற்றும் கல்வித்துறை ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் டெங்கு நோய் பரவலை தடுக்கலாம்.

டெங்கு என்பது ஏடிஸ் வகை கொசுவால் பரவும் வைரஸ் நோயாகும். ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை சுத்தமான நீர் தேக்கத்தில் கொசு இனப்பெருக்கம் செய்கிறது. மழையின் போது பிளாஸ்டிக் தேனீர் கோப்பைகள், அலுமினிய நகர்வு ஜன்னல்களில் அடிபாகம் விளிம்புகளில், பறவை தண்ணீர் தட்டுகளில், தொழிற்சாலையில் உள்ள உபகரணங்களில், தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளில், உணவு காலி அலுமினிய பாக்கெட்டுகளில், சுத்தமான தண்ணீர் ஒரு வாரத்திற்கு மேல் தேங்குவதால் டெங்கு நோய் பரவும் ஏடிஎஸ் கொசு உருவாக வாய்ப்பு உள்ளது. டெங்கு காய்ச்சல் சாதாரணமாக காய்ச்சல் அறிகுறிகள் உடன் தாமாகவே சரியாகிவிடும். அடுத்த நிலையில் உடலில் கண் புருவங்களுக்கு பின் தாங்க முடியாத அளவில் தலைவலி, மூட்டுகளை முறிக்கும் அளவிலான வலி இதன் காரணமாகவே இந்த நோய் 'டெங்கு காய்ச்சல்' என்றும் பெயர் உருவானது. மற்றொரு பெயரான 'மூட்டு முறிவு காய்ச்சல்' என்றும் பெயர் பெற்றது. மூன்றாவதாக டெங்கு காய்ச்சல் உருவாக்கும் வைரஸ் கிருமி இரத்த அணுக்களில் ஒன்றான ரத்த தட்டுகளை எந்தவிதமான அடியும் படாத நிலையில் ரத்த கசிவு உருவாவதற்கான காரணமாகிறது. இதன் காரணமாக ரத்த நாடி மற்றும் ரத்த அழுத்தம் குறைகிறது, இதை 'டெங்கு ரத்த கசிவு காய்ச்சல்' என்றும் அழைக்கப்படுகிறது. கடைசியாக உடலில் தண்ணீர் சத்து குறைவு காரணமாக ரத்த நாடி மற்றும் ரத்த அழுத்தம் குறைகிறது. இதை 'டெங்கு ஷாக் சின்ட்ரோம்' என்று அழைக்கிறோம். இந்த கடைசி இரண்டு வகை பெரும்பாலும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடியது. டெங்கு காய்ச்சல் உருவாக்கும் வைரஸ்க்கு தனி சிகிச்சை ஏதும் கிடையாது. நோய் அறிகுறிகளுக்கான உரிய சிகிச்சை மட்டுமே வழங்கப்படுகிறது. டெங்கு காய்ச்சல் விட்ட பிறகு நமக்கு நன்றாகிவிடும் என்ற பொய்யான தோற்றத்தை உருவாக்கி பாதிப்புகளை உடலில் நாம் உணராத வகையில் உருவாக்குவதாலும், கால தாமத சிகிச்சையாலும் உயிர் பலி ஏற்படுகிறது. நம் புதுவை மாநிலத்தை பொருத்தமட்டில் டெங்கு ஒழிப்பு பணிநாள்தோறும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார உதவியாளர்கள், மலேரியா, பைலேரியா களப்பணியாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் டெங்கு பாதித்த முக்கிய பகுதிகளில் தீவிர கொசு ஒழிப்பு பணிகளை ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். மேலும் மற்ற அனைத்து பிராந்தியங்களிலும் தீவிர கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு பரவுவதை தடுக்க தீவிர படுத்தப்பட்ட கொசு புழு மற்றும் புகை மருந்து தெளிப்பு நடவடிக்கைகள் சுகாதாரத்துறை மூலம் டெங்கு காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டெங்கு காய்ச்சல் உருவாக்கும் ஏடிஸ் வகையான கொசுக்கள் பகல் நேரத்தில் கடிப்பதால் அலுவலகம் மற்றும் பள்ளிகளுக்கு செல்பவர்கள் கொசு கடிக்காத வண்ணம் பாதுகாப்பாக இருப்பது அவசியம். மேலும் ஜன்னல்களில் வலைகள், கொசு விரட்டி, மூலிகை கொசு விரட்டிகள் முதலானவைகளை பயன்படுத்துவதன் மூலம் உள்ளே கொசு வராமல் தடுக்கலாம். டெங்கு நோய் உருவாக்கும் கொசுக்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்ட தண்ணீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்தும் நிகழ்வு (DSR ) மூலமாகவே இந்த நோயை நாம் மனித குலத்தை தாக்காமல் எளிய வண்ணம் தடுக்கலாம். டெங்கு நோய் கட்டுப்படுத்த அனைத்து துறைகளை ஒருங்கிணைத்து அதாவது உள்ளாட்சி பணி, பொதுப்பணி, ஏனைய கல்வித்துறையின் பங்களிப்போடு செவ்வனே மேற்கொள்ளப்படுகின்றது. வாரம் ஒரு முறை வீடுகளை சுத்தப்படுத்தி உலர்தினம் ( Weekly Dengue Day- Dry day) கடைப்பிடிப்பதன் மூலம் கொசு புழுவின் வளர்ச்சியை தடைபடுத்தி இதன் மூலமாக டெங்கு பருவதை தடுக்க இயலும். இந்த டெங்கு ஒழிப்பு பணியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், இளைஞர் நற்பணி மன்றங்கள் முதலான மக்கள் சேவை இயக்கங்கள் ஈடுபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சமூக பொறுப்பு மற்றும் சமூக பங்களிப்புணர்வோடு இந்த நோயை கட்டுப்படுத்துவதில் ஒருங்கிணைந்து டெங்கு இல்லாத புதுவை உருவாக்குவோம் என புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செவ்வேள் குறிப்பிட்டுள்ளார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top