Times of Puducherry
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் 6-ந் தேதி நடக்கிறது. தேர்தலில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் பா.ஜ.க. கூட்டணி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்தனும், தி.மு.க. வேட்பாளராக சேது செல்வமும், இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் மாநில செயலர் சலீமும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்தல் பணியை தொடங்கி செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த பொதுத்தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் த.வெ.க-வுடன் மாநில கட்சியான நேயம்மக்கள் கழகம் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் நேயம் மக்கள் கழகம் வேட்பாளர் வினாயகம் 2-ம் இடம் பிடித்தார். இதனால் மீண்டும் வினாயகம் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதற்கு த.வெ.க. மட்டுமில்லாது தற்போது கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவையும் கோரியுள்ளனர்.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியானது தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு த.வெ.க. பொதுச் செயலர் ஆனந்த்தை சந்தித்து கடிதம் தந்தனர். இந்த சூழலில் காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.அனந்தராமன் ஆகியோர் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இந்திய கம்யூனிஸ்ட்டு போட்டியிடுவதைத் தவிர்த்து காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வலியுறுத்தினர். ஆனால் அதற்கு இந்திய கம்யூனிஸ்ட்டு நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்தனர். கடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தங்களை கூட்டணியில் அலைக்கழித்ததையும், சீட்டு ஒதுக்காமல் தவிர்த்ததை சுட்டிக்காட்டினர். மேலும் இந்திய கம்யூனிஸ்ட்டு சார்பில் நேரடியாக டெல்லியில் காங்கிரஸ் தலைமையிடமும், சென்னையில் தலைமையிடமும் பேசிக்கொள்வோம் என தெரிவித்து அனுப்பினர்.
இதனால் த.வெ.க.வுக்கும் யாரை ஆதரிப்பது என்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் த.வெ.க. அரசுக்கு காங்கிரஸ், வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவளித்து அமைச்சரவையில் பங்கேற்றுள்ளனர். கம்யூனிஸ்ட்டு கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தருகின்றனர். இதனால் யாருக்கு ஆதரவு தருவது என த.வெ.க-வுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதோடு த.வெ.க. தலைவர் விஜய் லண்டன் சென்றுள்ளார்.
பொதுச் செயலர் ஆனந்த் புதுவையை சேர்ந்தவர் என்பதால் அவரையே முடிவு எடுக்க கட்சித்தலைமை உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே நேயம் மக்கள் கழகத்தைச் சேர்ந்த வினாயகம் காங்கிரசில் இன்று நாராயணசாமி மற்றும் வைத்தியலிங்கத்தை சந்தித்து தன்னை காங்கிரஸ் இணைத்துக் கொண்டார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.