Times of Puducherry
புதிய தலைமைச் செயலகம் பட்டினப்பாக்கத்தில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். புதிய தலைமைச் செயலகம் தொடர்பாக பல ஆண்டுகளாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. புதிய தலைமைச் செயலகம் தேவைதானா என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சிக்கல்கள்
தமிழ்நாட்டின் சட்டமன்ற வளாகம் மற்றும் தலைமைச் செயலகம் ஆகியவை சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருகின்றன. இது 1639 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலகட்டத்தில் கட்டப்பட்ட பழமையான கட்டிடம் ஆகும். இது இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பரிய சின்னம் என்பதால் இங்கு நவீன மாற்றங்களையோ கூடுதல் கட்டுமானங்களையோ எளிதில் மேற்கொள்ள முடியாது. ராணுவ கட்டுப்பாட்டு பகுதிகள் மற்றும் குறுகிய வழிகள் இருப்பதால் பொதுமக்களின் வருகை மற்றும் வாகன நிறுத்தும் இடங்களுக்கு பெரும் சிரமங்கள் நிலவுகிறது. தற்கால டிஜிட்டல் ஆளுமை மற்றும் அதிநவீன தொடர்பு மையங்களை அமைப்பதில் கட்டமைப்பு சார்ந்த வரம்புகளும் உள்ளன.
கருணாநிதி கட்டிய புதிய சட்டசபை
இதையெல்லாம் கருத்தில் கொண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றாக அண்ணா சாலையில் உள்ள ஓமாந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் கட்டப்பட்டது. 2006 – 2011 ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி சுமார் ரூ.600 கோடி மதிப்பீட்டில் அந்த கட்டிடத்தை அமைத்தார். கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 2011 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா புதிய சட்டசபை கட்டிடத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றினார். பின்னர் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையிலேயே தமிழக தலைமைச் செயலகம் செயல்பட்டு வருகிறது.
முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
2011, 2016 ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெற்றதால் புனித ஜார்ஜ் கோட்டையிலேயே சட்டமன்றம் செயல்பட்டு வந்தது. அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் மீண்டும் ஓமாந்தூரார் அரசினர் வளாகத்திற்கு சட்டமன்றம் மாற்றப்படும் என்று பேச்சுக்கள் எழுந்தது. ஆனால் அப்போதைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டமன்றத்தை புனித ஜார்ஜ் கோட்டையிலேயே தொடர்ந்தார். இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜோசப் விஜயின் தமிழக வெற்றி கழகம் ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சர் விஜய் தற்போது உள்ள தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றத்தில் இட நெருக்கடியை கருத்தில் கொண்டு பட்டினப்பாக்கத்தில் ரூ.1200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் கட்டப்படும் என அறிவித்துள்ளார்.
புதிய சட்டமன்றம் தேவைதானா?
ஓமாந்தூரார் வளாகத்தில் கருணாநிதியால் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தின் ஒரு பகுதி மட்டுமே மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. அதன் மற்றொரு பகுதி பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில் தற்போது புதிய தலைமைச் செயலகம் தேவையா என்கிற கேள்வி எழுந்துள்ளது. மேலும் பட்டினப்பாக்கம் பகுதியில் வசிக்கும் மீனவர்கள் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நிர்வாக ரீதியாக அனைத்து அரசு துறைகளும் ஒரே கூரையின் கீழ் இயங்க நவீன வசதிகளுடன் கூடிய வளாகம் தேவை என்கிற கருத்து வலுவாக இருப்பினும், புதிய கட்டிடம் கட்டுவதா அல்லது ஏற்கனவே இருக்கும் ஓமாந்தூரார் வளாகத்தை முழுமையாக பயன்படுத்துவதா என்பது அரசுகளின் அரசியல் தீர்மானங்களே இறுதி முடிவை நிர்ணயிக்கின்றன.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.