Times of Puducherry

மணக்குள விநாயகர் கவசம் அணிந்து கற்பக விருட்சம் அலங்காரத்தில் காட்சியளித்தார்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
14 Sep 2026 • 7:21 PM

விநாயகர் சதுர்த்தியையொட்டி புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகருக்கு தங்க கவசம் அணிவித்து கற்பக விருட்சம் அலங்காரத்தில் காட்சியளித்தார். 21 வாசனை திரவியங்களில் அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சர்வதேச சுற்றுலா நகரமான புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சதுர்த்தியையொட்டி அதிகாலை 4 மணி முதலே கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுது. அதன் பிறகு விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 21 வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் விநாயகர் கற்பக விருட்சம் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டு விநாயகர் தரிசித்து வருகின்றனர். பக்தர்கள் அனைவரும் தரிசிக்கும் வகையில் சர்வ திவ்ய தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பக்தர்களுக்கும் இடைவிடாது லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. மொத்தம் 16 ஆயிரம் லட்டு பிரசாதமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு விழுப்புரம் மற்றும் கடலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இது போன்று புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து விநாயகர் ஆலயங்களிலும் வழக்கமான உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top