Times of Puducherry

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: விழாக்கோலம் பூண்ட மதுரை

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
17 Sep 2026 • 7:48 AM
Madurai Meenakshi Amman Temple Kumbhabhishekam

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன்–சுந்தரேசுவரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று (செப்டம்பர் 17) காலை கோலாகலமாக நடைபெறுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தப் பெருவிழாவை முன்னிட்டு, மதுரை மாநகரமே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பல மாதங்களாக சுமார் ரூ.25 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்றன. தீ விபத்தில் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டபமும் புனரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

184 யாக குண்டங்களுடன் பிரம்மாண்ட யாகசாலை

கும்பாபிஷேக விழாவுக்காக வடக்கு ஆடி வீதியில் 184 யாக குண்டங்களுடன் பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டது. மூலவர் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேசுவரருக்காக பிரத்யேக தங்கக் குடங்கள் வைக்கப்பட்டுள்ளன. கங்கை, யமுனை, காவிரி, வைகை உள்ளிட்ட பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் கலசங்களில் நிரப்பப்பட்டு, தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. 400-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேள்விகளை நடத்தி வந்தனர்.

414 பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகத்தின் முன்னோட்டமாக நேற்று பரிவார தெய்வங்களுக்கான கும்பாபிஷேகம் நடைபெற்றது. சித்தி விநாயகர், கூடல்குமாரர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, மகாலட்சுமி, பத்திரகாளி, அக்னி வீரபத்திரர், 63 நாயன்மார்கள், நவகிரகங்கள் உள்ளிட்ட 414 பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலவர் மீனாட்சி அம்மன்–சுந்தரேசுவரர் சன்னதிகள், தங்க விமானங்கள், சன்னதி விமானங்கள் மற்றும் 12 கோபுரங்களுக்கான இறுதிக்கட்ட யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.

இன்று அதிகாலை 3.45 மணிக்கு 12-ம் கால யாக பூஜை நடைபெற்றது. காலை 5.45 மணிக்கு யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கடங்கள் புறப்பாடு நடைபெற்று, 12 கோபுரங்கள் மற்றும் தங்க விமானங்களுக்கு புனிதநீர் கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் காலை 7.40 மணிக்கு 12 கோபுரங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 8.10 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கும், 8.50 மணிக்கு சுந்தரேசுவரருக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை மாநகரின் முக்கிய பகுதிகள் மின்னொளி அலங்காரத்தில் ஜொலிக்கின்றன. கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வருகையால் திருவிழா சூழல் நிலவுகிறது. கும்பாபிஷேகத்தை நேரில் காண முடியாத பக்தர்களுக்காக, இன்று இரவு 7 மணிக்கு மீனாட்சி அம்மன்–சுந்தரேசுவரர் நான்கு மாசி வீதிகளிலும் வீதி உலா வந்து அருள்பாலிக்க உள்ளனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top