Times of Puducherry

கவுண்டம்பாளையம் தொகுதிக்கு ரூ. 3.39 கோடியில் 7 முக்கிய திட்டங்கள்: எம்.எல்.ஏ கனிமொழி தகவல்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
13 Sep 2026 • 11:46 AM

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், 2026–27ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி மக்களின் சுகாதார நலனை மேம்படுத்தும் வகையில் ₹3.39 கோடி (₹339.19 லட்சம்) மதிப்பிலான 7 முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் தொகுதிக்குட்பட்ட 14 மருத்துவ நிறுவனங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் நேரடியாக பயன்பெற உள்ளன.

குறிப்பாக, விளாங்குறிச்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற சமுதாய சுகாதார மையமாக தரம் உயர்த்தப்படுவது, தொகுதி மக்களுக்கு உயர்தர மருத்துவச் சேவைகள் அருகிலேயே கிடைக்க வழிவகுக்கும். மேலும், துடியலூர் மற்றும் எஸ்.எஸ்.குளம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொற்றா நோய் சிகிச்சை, உயர்சிகிச்சை மற்றும் பரிவுரை சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.

கவுண்டம்பாளையம் மற்றும் எஸ்.எஸ்.குளம் பகுதிகளில் 14 அடிப்படை இலவச உடல்நலப் பரிசோதனைகள், நாயக்கன்பாளையம் பகுதி பழங்குடியின மக்களுக்கான நடமாடும் மருத்துவ சேவை, சர்க்கார்சாமக்குளம் பகுதியில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சேவைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மக்களின் நல்வாழ்வை முதன்மையாகக் கொண்டு கவுண்டம்பாளையம் தொகுதிக்கு இத்தகைய முக்கியமான சுகாதாரத் திட்டங்களை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களுக்கும், மாண்புமிகு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. அருண்ராஜ் அவர்களுக்கும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. கனிமொழி சந்தோஷ் தனது மரியாதையுடன் கூடிய நன்றியைத் தெரிவித்துள்ளார்.

மேலும், இத்திட்டங்கள் அனைத்தும் விரைந்து செயல்படுத்தப்பட்டு, தொகுதி மக்களுக்கு அதன் முழுமையான பயன்கள் கிடைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தனது முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top