Times of Puducherry

'தேர்தல் விதிமுறைகளை கேலிக்கூத்தாக்கும் செயல்': கராத்தே தியாகராஜன் விளாசல்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
20 Sep 2026 • 6:53 PM
Karate Thiagarajan BJP TN elections CEO dharapuram madurantakam

பா.ஜ.க-வின் கராத்தே தியாகராஜன் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “தமிழகத்தில் நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் பிரச்சாரம் செய்வதற்காக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் – CEO TN, வெளியிட்டுள்ளது. இந்த நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் தமிழக வெற்றிக் கழகத்தினுடைய நட்சத்திர பேச்சாளர்களாக தமிழக முதல்வர் திரு ஜோசப் விஜய் அவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காதர் மொகிதீன், விசிக கட்சியைச் சார்ந்த ரவிக்குமார் MP, வன்னியரசு மற்றும் சிந்தனை செல்வன் போன்ற பிற கட்சிகளின் தலைவர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

நட்சத்திர பேச்சாளர்களை பொருத்தவரை அந்தந்த கட்சியை சார்ந்த தலைவர்களை மட்டுமே நட்சத்திர பேச்சாளர்களாக அறிவிக்க முடியும் என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தினுடைய பிரிவு 77 ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி சட்டத்தினுடைய பிரிவு தெளிவாக குறிப்பிட்டு இருக்கும்போது, தமிழக தேர்தல் ஆணையம் – CEO TN, தவெக கொடுத்துள்ள 40 பேர் கொண்ட நட்சத்திர வேட்பாளர் பட்டியலில் பிற கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய பேர்களைக் கொண்ட அந்த பட்டியலை தமிழக வெற்றி கழகத்தினுடைய நட்சத்திர பேச்சாளர்களாக அங்கீகரித்துள்ளது இது தமிழக தேர்தல் ஆணையம் – CEO TN மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கேலிக்கூத்தாக்கும் செயலாக உள்ளது.

சட்டத்தின்படி நடக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தையும் சட்டத்தையும் கேலிக்கூத்தாக்கி ஆளும் கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.தமிழகத்தில் நடைபெறக்கூடிய மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறுமா என்ற கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இதே போன்று ஆம் ஆத்மி கட்சி அதன் உறுப்பினர் அல்லாதவரை நட்சத்திர வேட்பாளராக அறிவித்த விவகாரத்தில் சர்ச்சை எழுந்து, பிறகு கட்சியின் உறுப்பினர் அல்லாதவர் நட்சத்திர பேச்சாளராக இருக்க முடியாது என்ற நிலை உருவானது.

எனவே உடனடியாக தமிழக தேர்தல் ஆணையம் – CEO TN தமிழக வெற்றி கழகத்திற்கு 2026 மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக தமிழக வெற்றிக்கழகத்திற்கு அங்கீகரித்துள்ள நட்சத்திர பேச்சாளர் பட்டியலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்று அவர் கூறியுள்ளார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top