Times of Puducherry

ஆபரேஷன் தண்டர் ஸ்ட்ரைக்: காரைக்காலில் ரூ.6.08 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் பறிமுதல்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
14 Sep 2026 • 10:10 AM

காரைக்கால் மாவட்ட காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் தண்டர்ஸ்ட்ரைக்’ நடவடிக்கையில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இலங்கை நாட்டவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.6.08 கோடி மதிப்பிலான 7.605 கிலோ மெத்தாம்பெட்டமைன் மற்றும் 12.14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வினய் குமார் கட்ஜ், IPS, தெரிவித்தார். காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக மாநாட்டு அரங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற முதல் நடவடிக்கையில், காரைக்கால்மேட்டைச் சேர்ந்த நிஜந்தன் என்பவர் 1.438 கிலோ மெத்தாம்பெட்டமைனுடன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரிடமிருந்து 6.137 கிலோவும், காரைக்கால்மேட்டைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவரிடமிருந்து 30 கிராம் மெத்தாம்பெட்டமைனும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பாக்கியராஜின் கூட்டாளியான இலங்கை நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ் ராபர்ட் ஜெரமி என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையில் மொத்தம் 7.605 கிலோ மெத்தாம்பெட்டமைன், 3 செல்போன்கள் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

தொடர்ந்து, கீழவாஞ்சூர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற சோதனையில் 10.84 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 3 செல்போன்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கோட்டுச்சேரியில் நடைபெற்ற சோதனையில் 248 சிறிய பொட்டலங்களாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த முழு நடவடிக்கையும் சுமார் 30 நாட்கள், 6 காவல் குழுக்களைச் சேர்ந்த 25 காவலர்களின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆய்வு செய்யப்பட்டதாகவும் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். காரைக்கால் மாவட்டத்தை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்றும் நோக்கில் காவல்துறை தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், போதைப்பொருள் விற்பனை அல்லது பயன்பாடு தொடர்பான தகவல்களை பொதுமக்கள் 112 அல்லது 1933 (MANAS) என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தகவல் அளிப்பவர்களின் அடையாளம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top