Times of Puducherry

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையும் இ எஸ் ஐ சி இணைந்து ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
18 Sep 2026 • 5:55 PM
jipmer

ESIC பயனாளிகளுக்கு பணமில்லா தரமான மருத்துவச் சேவைகளை வழங்க ஜிப்மர்-ESIC இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம். ஜிப்மர் மற்றும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஊழியர்கள் மாநிலக் காப்பீட்டுக் கழகம் (ESIC) ஆகியவற்றுக்கு இடையே, ESIC பயனாளிகள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு ஜிப்மரில் பணமில்லா மருத்துவச் சேவைகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தாகியுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜிப்மர் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் சாகா வினோத் குமார் ESIC, புதுச்சேரி மாநில மருத்துவ அலுவலர் டாக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

ஜிப்மர் இயக்குநர் டாக்டர் வீர் சிங் நேகி முன்னிலை வகித்தார். ஜிப்மர் மற்றும் ESIC-ஐச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும்
பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம், ESIC மருத்துவக் கட்டமைப்பு அல்லது குறிப்பிட்ட உயர்
சிறப்பு மருத்துவச் சேவைகள் போதுமான அளவில் இல்லாத சூழல்களில், அதன் பயனாளிகளுக்கு ஜிப்மரில் மேம்பட்ட சிறப்பு மருத்துவச் சேவைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

ஒப்பந்தத்தின் கீழ், வெளி நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் சிகிச்சை, நோயறிதல் மற்றும் ஆய்வகப் பரிசோதனைகள்,
அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சைகள், மருத்துவ நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவச் சேவைகள் ESIC பயனாளிகளுக்கு வழங்கப்படும். ESIC-ST பரிந்துரை நடைமுறையின் மூலம் ஆன்லைன் பரிந்துரைகள் மேற்கொள்ளப்படுவதுடன், நடைமுறையில் உள்ள ESIC விதிமுறைகள் மற்றும் இருதரப்பும் ஒப்புக்கொண்ட கட்டண விகிதங்களின் அடிப்படையில் பணமில்லா சிகிச்சை வழங்கப்படும். பயனாளிகளுக்கு சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய, ESIC Mitra ஒற்றைத்தொடர்பு அலுவலர் போன்ற ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆரம்பமாக இரண்டு ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். இருதரப்பினரின் பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்க முடியும். இந்த ஒப்பந்தம், ஜிப்மர் மற்றும் ESIC ஆகிய இரு அரசு நிறுவனங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, ESIC பயனாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு
அணுகக்கூடிய, தரமான மற்றும் பணமில்லா உயர் சிறப்பு மருத்துவச் சேவைகளை வழங்குவதற்கான முக்கிய முன்னெடுப்பாக அமைகிறது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top