Times of Puducherry

11 வயது சிறுமிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து ஜிப்மர் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
19 Sep 2026 • 8:21 PM
jipmer nepro surgery

ஜிப்மர் குழைந்தைகள் மருத்துவத் துறை, பல்துறை நிபுணர் குழுவின் கூட்டு முயற்சியுடன் முதல் குழந்தைகளுக்கான சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை ஜிப்மர் குழந்தைகள் மருத்துவத் துறை தனது முதல் குழந்தைகளுக்கான சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியது. இறுதிக்கட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக
டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த 11 வயது சிறுமிக்கு இந்த சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

சிறுமியின் தாயார் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கியுள்ளார். அவரது தன்னலமற்ற தானம், பெற்றோரின் துணிச்சலுக்கும் அன்புக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் தாயும், சிறுமியும் நலமாக குணமடைந்து வருகின்றனர்.

ஜிப்மரில் ஏற்கனவே செயல்பட்டு வரும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைத் திட்டத்தின் மூலம் பெரியவர்கள் மற்றும் இளம் பருவத்தினருக்கும் சிறுநீரக மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் குழந்தைகளுக்கான விரிவான உறுப்பு மாற்று சிகிச்சை பராமரிப்பில் ஜிப்மர் தேர்ந்த அனுபவத்தைப் பெற்றுள்ளது. ஜிப்மரின் பல்வேறு சிறப்பு மருத்துவக் குழுக்களின்
ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்தச் சாதனை, குழந்தைகள் மருத்துவத் துறையுடன் இணைந்து செயல்பட்ட சிறுநீரக மருத்துவத் துறை, சிறுநீரக அறுவைச் சிகிச்சைத் துறை, மயக்கவியல் துறை, உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை தீவிர சிகிச்சைப் பிரிவு, செவிலியர் குழுவினர், உறுப்பு மாற்று அறுவைச்
சிகிச்சை ஒருங்கிணைப்பாளர்கள், டயாலிசிஸ் தொழில்நுட்ப வல்லுநர்கள், உணவியல் நிபுணர்கள், பிசியோதெரபி நிபுணர்கள் மற்றும் பிற இணை மருத்துவப் பணியாளர்கள் ஆகியோரின் சிறப்பான பல்துறை ஒருங்கிணைந்த பணியின் மூலம் சாத்தியமானது. அறுவைச்
சிகிச்சைக்கு முந்தைய மதிப்பீடு, டயாலிசிஸ் மற்றும் நோயாளியை சிகிச்சைக்குத் தயார்படுத்துதல், உறுப்பு தானம் செய்பவரின் மதிப்பீடு, மாற்று அறுவைச் சிகிச்சை, அறுவைச் சிகிச்சையைச் சுற்றியுள்ள காலகட்ட பராமரிப்பு, நோய் எதிர்ப்புத் தடுப்பு மருந்துகள், உடலில்
திரவம் மற்றும் மின்னழுத்த சமநிலை பராமரிப்பு, ஊட்டச்சத்து பராமரிப்பு மற்றும் அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் இந்தக் குழுக்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பு அமைந்தது.

ஜிப்மர் இயக்குநர் டாக்டர் வீர் சிங் நேகி, இந்த முக்கியமான சாதனைக்காக ஒட்டுமொத்த பல்துறை மருத்துவக் குழுவினரையும் பாராட்டிகூறியதாவது:

குழந்தைகளுக்கான சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ஒவ்வொரு நிலையிலும் உயர்ந்த மருத்துவத் திறன், மிகத் துல்லியமான ஒருங்கிணைப்பு மற்றும் குழந்தைகளுக்கே உரியசிறப்பு மருத்துவப் பராமரிப்பு தேவைப்படுகிறது. அறுவைச் சிகிச்சை என்பது இந்தப்
பயணத்தின் ஒரு பகுதி மட்டுமே. நோய் எதிர்ப்புத் தடுப்பு மருந்துகளின் பயன்பாடு, உடலில் திரவம் மற்றும் மின்னழுத்த சமநிலையைப் பராமரித்தல், ஊட்டச்சத்து, மயக்கவியல், தீவிர சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய கண்காணிப்பு ஆகிய அனைத்தும் வளர்ந்து வரும் குழந்தையின் தேவைகளுக்கு ஏற்ப கவனமாக மாற்றியமைக்கப்பட வேண்டும். இந்தச் சிறுமியின் வெற்றிகரமான சிகிச்சை முடிவு, பல்வேறு துறைகளைச் சேர்ந்த எங்கள் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இணை மருத்துவப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு, திறமை மற்றும் சிறப்பான ஒருங்கிணைந்த குழுப்பணியை பிரதிபலிக்கிறது. இந்தத் தனித்துவமான திட்டத்தை முன்னெடுத்துச் சென்ற குழந்தைகள் நலத் துறையினரையும், இந்த முக்கியமான சாதனைக்கு பங்களித்த ஜிப்மரின் அனைத்து குழுக்களையும் நான் பாராட்டுகிறேன். இந்த அனுபவம், ஜிப்மரில் நிலையான குழந்தைகளுக்கான சிறுநீரக மாற்று சிகிச்சைத் திட்டத்தை உருவாக்குவதற்கான வலுவான அடித்தளமாக அமையும் என்றும், இறுதிக்கட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மேலும் பல குழந்தைகள் பொது சுகாதார அமைப்பின் கீழ் மேம்பட்ட சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெறுவதற்கு இது வழிவகுக்கும்.

இந்தத் திட்டம், புதுதில்லி எய்ம்ஸ் (AIIMS) குழந்தைகள் சிறுநீரக மருத்துவக் குழுவினரின் வழிகாட்டுதல் மற்றும் மருத்துவ ஆலோசனையாலும், சர்வதேச குழந்தைகள் மாற்று அறுவைச் சிகிச்சை சங்கம் (International Paediatric Transplant Association – IPTA) மேற்கொள்ளும் Outreach Partnership திட்டத்தின் கீழும் பயனடைந்துள்ளது. இந்த மானியத்தின் மூலம் பெறப்படும் அனுபவம், ஜிப்மரில் நிலையான மற்றும் அர்ப்பணிப்புமிக்க குழந்தைகள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைத் திட்டத்தை மேம்படுத்துவதற்குப் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சாதனையில் சிகிச்சைக்கான செலவைக் குறைக்கும் வசதியும் முக்கியமான அம்சமாகும்.

பொது சுகாதார நிறுவனமான ஜிப்மர், மருத்துவச் சேவைகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளை அதிக அளவில் மானியத்துடன் வழங்குவதன் மூலம், சிக்கலான உறுப்பு மாற்று சிகிச்சைகளால் ஏற்படும் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கிறது. தகுதியுடைய பயனாளிகளுக்கு பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (PM-JAY) மற்றும் பொருந்தக்கூடிய அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் கிடைக்கும் நிதியுதவி, சிகிச்சைக்காக குடும்பங்கள் தங்களது சொந்தமாகச் செலுத்த வேண்டிய தொகையையும் மேலும் குறைக்க
உதவுகிறது. இதன் மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் மேம்பட்ட சிறுநீரக மாற்று சிகிச்சை அணுகக்கூடியதாகிறது. இந்த மைல்கல், விரிவான, கணிவான மற்றும் சிறப்பு வாய்ந்த குழந்தைகள் நல மருத்துவச்
சேவைகளை விரிவுபடுத்துவதற்கான ஜிப்மரின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது. மேலும், இறுதிக்கட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலேயே மேம்பட்ட சிறுநீரக மாற்று சிகிச்சை சேவைகளை வழங்குவதற்கான ஜிப்மரின் திறனையும் இது மேலும் வலுப்படுத்துகிறது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top