Times of Puducherry

விடுதி உரிமையாளரை கடத்தி நகை பறிப்பு: 5 பேர் கைது, ஒருவர் தலைமறைவு

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
11 Sep 2026 • 8:27 PM

புதுச்சேரியில் ரூ.30 ஆயிரம் கடனை திருப்பிக் கொடுப்பதாக கூறி விடுதி உரிமையாளரை வரவழைத்து, சரக்கு வாகனத்தில் கடத்திச் சென்று 6 பவுன் தங்க நகைகளை பறித்த சம்பவத்தில் பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். கருவடிக்குப்பத்தை சேர்ந்த மனோகர் விடுதி நடத்தி வருகிறார்.இவருக்கு உப்பளம் பகுதியை சேர்ந்த ரேவதி என்பவர் பழக்கமாகி உள்ளார். ரேவதிக்கு மனோகர் ரூ.50 ஆயிரம் கொடுத்த நிலையில், ரூ.20 ஆயிரத்தை மட்டும் திருப்பிக் கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.30 ஆயிரத்தை வழங்காமல் ரேவதி காலம் கடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 4-ம் தேதி ரேவதி போன் செய்து, பணத்தை பெற்றுக் கொள்ள கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனை எதிரே உள்ள ஆம்புலன்ஸ் நிறுத்துமிடத்துக்கு வருமாறு மனோகரை அழைத்துள்ளார். அங்கு சென்ற மனோகரை ரேவதி மற்றும் அவரது கூட்டாளிகள் சரக்கு வாகனத்தில் குண்டுகட்டாக கடத்திச் சென்று, அவரிடம் இருந்த செயின், மோதிரம், கைச்செயின் உள்ளிட்ட 6 பவுன் நகைகளை பறித்துள்ளனர். பின்னர் அவரை மொரட்டாண்டி டோல்கேட் சர்வீஸ் சாலையில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து மனோகர் அளித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சீனியர் எஸ்.பி. கலைவாணன், எஸ்.பி. வம்சீதாரெட்டி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜ், எஸ்.ஐ. ராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

ரேவதியின் செல்போன் சிக்னல் மற்றும் டாடா ஏசி வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், குற்றவாளிகள் தமிழகம் மற்றும் கேரளா பகுதிகளுக்கு சென்று வந்தது தெரியவந்தது. பின்னர் ரேவதி மற்றும் அம்மு என்ற சுலக்சனா ஆகியோர் உப்பளம் மெயின் ரோட்டில் கல்லறை அருகே இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஜெயராஜ், மோகன்ராஜ், பரத் ஆகியோரும் கடத்தல் மற்றும் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட 5 பேரிடமிருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகள், செல்போன், ரூ.4 ஆயிரம் ரொக்கம், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் டாடா ஏசி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.இந்த வழக்கில் மேலும் ஒருவர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மோகன்ராஜ் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், அம்மு என்ற சுலக்சனா மீது ஏற்கனவே ஒரு வழக்கு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top