Times of Puducherry
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சேதுசெல்வத்திற்கு தீவிர வாக்கு சேகரிக்கும் பணிக்காக தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள 31 பூத்களுக்கும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு, பூத் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், புதுச்சேரி மாநில தேர்தல் பொறுப்பாளரும் ஜெகத்ரட்சகன் எம்.பி., திமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி, புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் சிவா, விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் இலட்சுமணன் எம்.எல்.ஏ., விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் பொன். கெளதமசிகாமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், விக்னேஷ் கண்ணன், கௌதம் திராவிடமணி, அவைத் தலைவர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தட்டஞ்சாவடி தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றிக்காக எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். கூட்டத்தில் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய திமுக செயலாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி, புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலை விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் தேர்தலைப் போல கருதி திமுக நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு கட்சி நிர்வாகியும் தலா 20 வாக்குகளை உறுதி செய்தாலே தேர்தலில் எளிதாக வெற்றி பெற முடியும் எனக் குறிப்பிட்ட அவர், தேர்தலில் வெற்றியையும் தோல்வியையும் திமுக சந்தித்துள்ளதாகவும், திமுக சந்திக்காத வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை என்றும் கூறினார்.
மேலும், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சேது செல்வத்தை கட்டாயம் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என நிர்வாகிகளிடம் பொன்முடி வலியுறுத்தினார். புதுச்சேரி முன்பு திமுகவின் கோட்டையாக விளங்கிய பகுதி எனக் குறிப்பிட்ட பொன்முடி, புதுச்சேரியை மீண்டும் திமுகவின் கோட்டையாக மாற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.20 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரிக்கு அடிக்கடி வந்து சென்றதாகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலத்தில் தனக்கு அரசியல் கற்றுக்கொடுத்த இடமாக புதுச்சேரி இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
புதுச்சேரியில் திமுக நிர்வாகிகளான ஜெகத்ரட்சகன் மற்றும் சிவா ஆகியோர் கட்சியை சிறப்பாக வழிநடத்தி வருவதாகவும் பொன்முடி கூறினார். தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் பிரசாரப் பணிகள் மற்றும் வாக்கு சேகரிப்பில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்திய பொன்முடி, தேர்தலுக்கு எஞ்சியுள்ள அடுத்த 14 நாட்களும் முக்கியமானவை என்றார்.
தமிழ்நாட்டில் நடைபெறும் இரண்டு இடைத்தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றால், மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.அதேபோல், புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி பெறுவது அரசியல் மாற்றத்துக்கு வழிவகுக்கும் என கழக கொள்கை பரப்புச் செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய பொன்முடி, தட்டாஞ்சாவடி வெற்றியை திமுக நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.புதுச்சேரியில் திமுகவுக்கு கிடைக்கும் வெற்றி தமிழ்நாட்டிற்கும் வழிகாட்டியாக அமையும் எனக் குறிப்பிட்ட அவர், தட்டாஞ்சாவடி தொகுதியை மீண்டும் திமுகவின் செல்வாக்கு மிக்க தொகுதியாக மாற்ற கட்சி நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
புதுச்சேரியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் மாநில அந்தஸ்து நிச்சயம் கிடைக்கும். திமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் புதுச்சேரியில் நிச்சயமாக அரசியல் மாற்றம் வரும். தட்டாஞ்சாவடி தொகுதியில் செல்லும் இடமெல்லாம் திமுக வேட்பாளருக்கு மக்கள் அமோக வரவேற்பு அளிக்கின்றனர். புதுச்சேரியில் ஆளும் பாஜக என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் வேலைவாய்ப்பு முற்றிலும் இல்லை. புதிய தொழிற்சாலைகள் கொண்டுவரப்படவில்லை. மூடப்பட்ட பஞ்சாலைகள் திறக்கப்படவில்லை. விமான நிலைய நிர்வாகத்திற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதுச்சேரியில் படித்த இளைஞர்கள் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. மூடப்பட்டுள்ள லிங்காரெட்டிபாளையம் சர்க்கரை ஆலையை திறக்க முடியவில்லை. கடந்த 10 வருடங்களாக மத்தியில் மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தபோதிலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கவில்லை. கூட்டணியில் இருந்த போதும் கூடுதல் நிதி பெற முடியவில்லை என குற்றம்சாட்டினார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.