Times of Puducherry
தருமபுரி மாவட்டம், வட்டுவநல்லி ஊராட்சிக்கு உட்பட்ட அழகட்டுமலை, ஏரிமலை, கோட்டூர் மலை உள்ளிட்ட மலை கிராமங்களில் சாலை வசதி இல்லாததால், அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த மூன்று மலை கிராமங்களும் அருகருகே அமைந்துள்ளன. இக்கிராமங்களுக்குச் செல்ல சுமார் 5 முதல் 8 கிலோமீட்டர் வரை அடர்ந்த வனப்பகுதி வழியாக நடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்தப் பாதையில் மூன்று முதல் நான்கு இடங்களில் காட்டாறுகளைக் கடக்க வேண்டியுள்ளது.
மேலும், அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. இதனால், அவசர காலங்களில் மருத்துவ சிகிச்சைக்காக பொதுமக்களை அழைத்துச் செல்வது பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக மலைப்பகுதிகளில், கனமழை பெய்து வருகிறது. இதனால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதிகாலை நேரத்தில் அழகட்டுமலை கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா அம்மாள் என்பவருக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வலியால் அவர் துடித்த நிலையில், அப்பகுதி மக்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடிவு செய்தனர். ஆனால், முறையான சாலை வசதி இல்லாததால், வேறு வழியின்றி மல்லிகா அம்மாளை டோலி கட்டி தூக்கிச் சென்றுள்ளனர். மழை பெய்துகொண்டிருந்த நிலையில், டார்ச் விளக்குகள் மற்றும் செல்போன் விளக்குகளின் உதவியுடன் சுமார் 7 கிலோமீட்டர் தூரம் அவரைத் தூக்கிச் சென்றுள்ளனர்.
வழியில் மூன்று இடங்களில் காட்டாறுகளைக் கடந்து, மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் அவரை தரைப்பகுதிக்கு அழைத்து வந்துள்ளனர். தொடர்ந்து பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். வயிற்று வலியால் பெண் துடித்த நிலையில், அவரை டோலி கட்டி மழையிலும் வெள்ளத்திலும் பொதுமக்கள் தூக்கிச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அடிப்படை சாலை வசதிகூட இல்லாமல் இந்த மக்கள் எதிர்கொள்ளும் சிரமத்தை இந்த சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது.
இந்த மலை கிராமங்களுக்கு சாலை வசதி அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பே மலை கிராமங்களுக்கு சாலை அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரை சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை.
ஒவ்வொரு மாதமும் சாலைப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையே நீடித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது, சாலை வசதி அமைப்பதற்கான கோப்புகள் தற்போது அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும், வருகின்ற ஜனவரி மாதம் இந்த மலை கிராமங்களுக்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் எனவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பல தலைமுறைகளாக அடிப்படை சாலை வசதியின்றி வாழ்ந்து வரும் மலை கிராம மக்களின் கோரிக்கைக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.