Times of Puducherry
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்லங்குப்பம் ஸ்ரீ லஷ்மி நகர் மற்றும் கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெளிச்செம்மண்டலம் ஆகிய பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பொதுமக்களின் வீடுகளில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
வடகிழக்கு பருவமழை காரணமாக சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து கடலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொண்டு வருகிறது. குடியிருப்பு பகுதிகள் மற்றும் திறந்த வெளியில் தூக்கி எறியப்படும் தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் டப்பாக்கள், வாகன டயர்கள் போன்றவற்றில் மழை நீர் தேங்குவதாலும் வீடுகளில் பயன்படுத்தப்படும் நீர் கொள்கலன்கள், குளிர்சாதனப்பெட்டி, ஏசி மெஷின்கள் போன்ற தண்ணீர் சேகரணமாகும் அனைத்து விதமான கொள்கலன்களில் பெருமளவில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகின்றன.
டெங்கு நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்திட கொசு உற்பத்தியை தடுப்பதே சிறந்த வழியாகும். இதன் பொருட்டு பொதுமக்கள் மழைநீர் தேங்கும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துவதன் மூலமாகவும், வீட்டு உபயோகப் பொருட்களில் நீர்சேதாரம் ஆவதை தவிர்ப்பதன் மூலமும், வீடுகளில் உள்ள மேல்நிலை நீர் சேகரிக்கும் தொட்டிகள், கொள்கலன்களை குறைந்தபட்சம் வாரம் ஒரு முறையாவது நன்கு சுத்தம் செய்து வெயிலில் உலர்த்துவதின் மூலமாகவும் இவ்வகையான கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்த முடியும். எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துகொள்வதன் மூலம் டெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த முடியும்.
பொதுமக்கள் மழை காலங்களில் பரவும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படும் விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். மேலும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 2025 ஆம் ஆண்டு 77 நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 111 நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 60 சதவீதம் நபர்கள் வெளிமாவட்டங்களில் வேலை செய்பவர்கள், கல்லூரி மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி துறை அலுவலர்கள் இணைந்து தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளில் தொடர் கண்காணிப்பு மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.