Times of Puducherry

தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் டெங்கு.! டெங்கு பாதித்தால் என்ன செய்ய வேண்டும்? வரமால் தடுக்க என்ன வழி?

எழுதியவர்: Ramprasath S
1 நிமிட வாசிப்பு
18 Sep 2026 • 6:14 PM
dengue cases rising in tamil nadu prevention tips and what to do if infected

தமிழ்நாட்டில் டெங்கு வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பின் தாக்கம் அதிகமாக உள்ளது.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாள்தோறும் சராசரியாக 200 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. வியாழன் அன்று மட்டும் 244 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாடு முழுவதும் 16,577 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வட மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் டெங்குவின் தாக்கம் அதிகரித்துள்ளது.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கொசு ஒழிப்புப் பணிகளை விரிவுபடுத்தவும், மருத்துவமனைகளில் தனியாக காய்ச்சல் வார்டுகளை அதிகப்படுத்தவும் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்படும் நோயாளிகளின் விவரங்களை உடனுக்குடன் சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளை அணுகுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வரும் போதிலும் இதுவரை டெங்கு எதுவும் பதிவாகவில்லை என்று மருத்துவ சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் டெங்கு கொசுவை ஒழிக்கும் பணிகளில் மாவட்டம் முழுவதும் 1500 சிறப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனையில் சிறப்பு காய்ச்சல் வார்டுகள் திறக்கப்பட்டுள்ளன. காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மருத்துவரின் அனுமதி இன்றி வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்ளக்கூடாது. இவை ரத்தப்போக்கு அபாயத்தை அதிகப்படுத்தும்.

உடலில் நீர் சத்து குறையாமல் இருக்க இளநீர், ஓஆர்எஸ் கரைசல், பழச்சாறுகள், நிலவேம்பு குடிநீர் போன்ற திரவ உணவுகளை பருக வேண்டும். நோயாளிக்கு முழுமையான உடல் ஓய்வு அவசியம். தொடர்ச்சியான கடுமையான வயிற்று வலி, வாந்தி, ஈறுகள், மூக்கு அல்லது மலத்தில் ரத்த கசிவு, அதிகப்படியான சோர்வு, மூச்சுத் திணறல், சிறுநீர் வெளியேற்றம் பெருமளவு குறைவது ஆகியவை டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ அவசர சிகிச்சைப் பிரிவை அணுகவும்.

டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஎஸ் கொசுக்கள் நல்ல தண்ணீரில் முட்டையிட்டு பெருகும். எனவே வீட்டின் மேல் உள்ள நீர் தொட்டிகள், ட்ரம் பக்கெட்டுகள், பிரிட்ஜின் பின்புற கழிவுநீர் தட்டு, பூந்தொட்டி தட்டுகளை வாரம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். நீர் சேமிக்கும் பாத்திரங்கள் தொட்டிகளை இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். வீட்டைச் சுற்றி தேங்கியுள்ள பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் கப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். பகல் நேரங்களில் தான் ஏடிஎஸ் பசுக்கள் கடிக்கும் என்பதால் கொசுவலை பயன்படுத்துவது, கொசு விரட்டிப் பூச்சிகளை தோலில் பயன்படுத்தலாம். ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் கொசு வலைகளை பொருத்தி கொசுக்கள் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்கலாம்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top