Times of Puducherry

தற்காலிக பட்டாசுக் கடைகளுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் ஆதித்யா செந்தில் குமார்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
21 Sep 2026 • 7:27 PM
crackers-permission-cud-collector

 தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெடிபொருள் சட்டம்-1884 மற்றும் வெடிபொருள் சட்ட விதிகள் 2008-இன் கீழ் கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், திட்டக்குடி மற்றும் வேப்பூர் ஆகிய வட்டங்களில், தற்காலிக பட்டாசுக் கடைகள் (Temporary Crackers shops) வைக்க விரும்புவோர் விதி எண்.84-இல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக (https://www.tnesevai.tn.gov.in) அரசு இ-சேவை மையங்களில், உரிய ஆவணங்களுடன் உரிமக் கட்டணம் ரூ.600/- செலுத்தி பதிவேற்றம் செய்யலாம். இணையதளம் வாயிலாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக 18.10.2026 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள், தற்காலிக உரிமம் கோரும் இடத்தின் அசல் நீல வரைபடம், உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளராக இருப்பின் அதற்கான பத்திர நகல், உரிமை கோரும் இடம் வாடகை கட்டிடம் எனில் இடத்தின் கட்டிட உரிமையாளரிடம் ரூ.20/-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்தப் பத்திரம், முத்திரைத்தாளில் நோட்டரி பப்ளிக் மூலம் Affidavit பெற வேண்டும், உரிமக் கட்டணம் ரூ.600/-ஐ உரிய அரசு கணக்கில் செலுத்தி அதற்கான செலுத்துச் சீட்டு மற்றும் சேவைக் கட்டணமாக ரூ.500/- செலுத்தப்பட்டமைக்கான செலுத்துச் சீட்டு, மனுதாரரின் முகவரிக்கான ஆதாரம், நடப்பு நிதியாண்டில் வீட்டுவரி செலுத்திய ரசீது, மனுதாரரின் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் -2, பட்டா நகல்.

விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதெனில், அதற்கான தற்காலிக உரிம ஆணையையும் (Temporary Crackers Licence), நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான காரணத்தையும் இணையதளம் வாயிலாகவே மனுதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், அனுமதியின்றி, உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நேர்வில், தற்காலிக பட்டாசுக்கடை அமைக்க, உரிமம் கோரி விண்ணப்பம் அளிப்போர், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி ஆட்சேபணையற்ற மற்றும் பாதுகாப்பான பட்டா உள்ள இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்குமாறும், விபத்தில்லாத மகிழ்ச்சியான தீபாவளிப் பண்டிகையை கொண்டாடிட ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top