Times of Puducherry

'நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் எங்களிடம் கேள்வி எழுப்புவது ஆச்சர்யம்': அமைச்சர் ஆதவ் பேச்சுக்கு சி.பி.எம் சண்முகம் பதில்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
21 Sep 2026 • 12:21 PM
CPM p shanmugam question Minister aadhav arjuna

கடந்த சனிக்கிழமை மதுராந்தகம் தேர்தல் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “கம்யூனிஸ்ட் தோழர்களைக் கேட்கிறேன். கடந்த ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில், பொதுப்பணித் துறையில் ஊழல் நடந்ததா இல்லையா? குடும்ப நிதி, கட்சி நிதி வாங்கினார்களா இல்லையா? நெஞ்சை நிமிர்த்தி கம்யூனிஸ்ட்கள் சொல்ல முடியுமா? தி.மு.க ஊழல் செய்யவில்லை என்று சொல்ல முடியுமா?

எங்கள் தலைவர் நினைத்திருந்தால், அ.தி.மு.க-விடம் ஆதரவு கேட்டு, அவர்களுக்கு 15 மினிஸ்டர் கொடுத்து முதல்வர் ஆகியிருக்க முடியும். எதற்காக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உடன் கூட்டணி சேர்ந்தார். சமூகநிதியில் அவர் உறுதியாக இருந்தார். பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டமன்றம் அமைப்பதற்கான ஆய்வுதான் மேற்கொண்டு வருகிறோம். இதுவரை அங்கு அமைப்பதற்கான எந்த முடிவையும் முதல்வர் விஜய் எடுக்கவில்லை. உடனே அதில் அரசியல் செய்து, மீனவர்களை ஏமாற்றுகிறார்கள். தலைமைச் செயலகமா, மீனவர்களின் வாழ்வா என்றால், தலைமைச் செயலகத்தைவிட மீனவர்கள் பக்கம்தான் எங்கள் தலைவர் இருப்பார். கம்யூனிஸ்ட் தோழர்கள் பேசுவதுதான் வருத்தமாக இருக்கிறது.” என்று கூறியிருந்தார்.

கேள்வி

இந்த நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எழுப்பி இருந்த கேள்விக்கு சி.பி.எம் மாநில செயலாளர் பெ.சண்முகம் பதில் அளித்திருக்கிறார். இது குறித்து அவர் பேசுகையில், “பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பதற்கு முதலமைச்சர் இறுதி முடிவு எடுக்காமல் எப்படி அரசாணை வெளிவந்தது? முதல்வருக்கு தெரியாமல் அரசாணை வெளியிட்டிருந்தால், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு தவெக அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் தனது டேபிளில் 3 கோப்புகள் இருப்பதாக கூறினார். நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் எங்களிடம் கேள்வி எழுப்புவது ஆச்சர்யம். ஊழல் குற்றச்சாட்டு, எல்லா காலத்திலும் சி.பி.எம் வலிமையாக முன்மொழிந்தது” என்று அவர் கூறியுள்ளார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top