Times of Puducherry

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஓய்வு அறை: புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
12 Sep 2026 • 9:07 PM

கட்டுமானத் தொழிலாளர்களுக்காக புதுச்சேரியில் 4 இடங்களிலும், காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு இடத்திலும் தொழிலாளர்கள் ஓய்வு அறை (Rest Room) அமைக்க புதுச்சேரி அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மல்லாடி தெரிவித்தார். மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் அமைச்சகம் சார்பில் மும்பையில் நடைபெற்ற அமைச்சர்கள் அளவிலான தேசிய மாநாட்டில் (கட்டிட மற்றும் பிற கட்டுமான தொழிலாளர்கள் வாரியம்) புதுச்சேரி பொதுப்பணித்துறை மற்றும் தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மத்திய தொழிலாளர் துறை வாரியத்தின் பிரதிநிதிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

புதுச்சேரி தொழிலாளர் துறையில் உள்ள வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, தற்போது புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், அதனுடன் மத்திய அரசு செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களையும் முழுமையாக அவர்களுக்கு பொருந்தும் வகையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கேட்டுக்கொண்டார். புதுச்சேரி தொழிலாளர் துறையில் தற்போது உறுப்பினர்களாக உள்ள தொழிலாளர்களில், சிறப்பு திறன் (Skill) கொண்டவர்களுக்கு, உதாரணமாக எலக்ட்ரீஷியன்களுக்கு, திறன் சான்றிதழ்கள் எதுவும் இல்லை. எனவே, இதுபோன்ற தொழிலாளர்களுக்கு தொழிலாளர் துறை மூலம் 7 நாட்கள் பயிற்சி அளித்து, பயிற்சி கால உதவித்தொகை (Stipend) வழங்குவதுடன், சான்றிதழும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுப்பப்படும் முன்மொழிவுகளுக்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கேட்டுக்கொண்டார்.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில், மத்திய தொழிலாளர் துறை வாரியத்தின் பிரதிநிதிகளுடன் விரைவில் ஒரு கூட்டம் நடத்தப்படும் என்று அமைச்சர் மல்லாடி தெரிவித்தார். கட்டுமானத் தொழிலாளர்களுக்காக புதுச்சேரியில் 4 இடங்களிலும், காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு இடத்திலும் தொழிலாளர்கள் ஓய்வு அறை (Rest Room) அமைக்க புதுச்சேரி அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்த ஓய்வறைகளில் தங்குமிடம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். தொழிலாளர் துறை தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து தேசிய அளவிலும், மாநில அளவிலும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top