Times of Puducherry

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்.!

எழுதியவர்: Ramprasath S
1 நிமிட வாசிப்பு
17 Sep 2026 • 2:43 PM
Congress leader and former Union Minister Sudarshana Nachiyappan passes away

காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்.!

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுதர்சன நாச்சியப்பன் இன்று (செப்டம்பர் 17) காலமானார். அவருக்கு வயது 78.

சிவகங்கை மாவட்டம் ஏரியூரில் பிறந்தவர் சுதர்சன நாச்சியப்பன். இவர் எம்.ஏ.பி.எல் படித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பட்டமும் பெற்றுள்ளார். காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த இவர் 1969 இளைஞர் காங்கிரஸ் மூலம் தனது அரசியல் வாழ்வைத் தொடங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவராகவும், நாடாளுமன்ற கொறடாகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்தை போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர. மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணைய அமைச்சராக பணியாற்றிய அனுபவம் உண்டு. உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான இவர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்று உரையாற்றியிருக்கிறார். 

நாடாளுமன்றத்தில் நிலைக் குழு தலைவராக இருந்த பொழுது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெண்களுக்கு சம உரிமை கொண்டுவர முக்கிய காரணமாக இருந்தார். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர் அதிகார பகிர்வு குறித்த சர்ச்சை எழுந்த பொழுது திமுகவிற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சி அதிகாரப் பகிர்வு குறித்து பேசிய பொழுது, “தற்போது அதிகாரத்தில் பங்கு கேட்பது சரியாக இருக்காது. திமுக கூட்டணியால்தான் காங்கிரஸ் தமிழகத்தில் வலுவாக வேரூன்ற முடிந்தது” என கட்சியின் தலைமைக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்திருந்தார்.

இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வு பெற்ற வந்த அவர் சிவகங்கையில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார் .அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை அவரது உடல் சொந்த ஊரான ஏரியூர் எடுத்துச் செல்லப்பட்டு, அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. நாளை (செப்டம்பர் 18) 3:30 மணியளவில் நல்லடக்கம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதர்சன நாச்சியப்பன் தற்போது தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருக்கும் மாணிக்கம் தாகூரின் சித்தப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top