Times of Puducherry
மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் காரைக்கால் மாவட்டத்தை வந்தடைந்ததை தொடர்ந்து, நல்லம்பல் பகுதியில் உள்ள நூலாற்று ரெகுலேட்டரில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. ஆற்றில் திரண்டு வந்த காவிரி நீரை மலர்கள் மற்றும் நெல்மணிகளைத் தூவி வரவேற்ற புதுச்சேரி வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன், ரெகுலேட்டரை இயக்கி பாசனத்திற்கான தண்ணீரை திறந்து வைத்தார்.
இதன் மூலம் நல்லம்பல், அம்பகரத்தூர், சேத்தூர், கருக்கங்குடி, சுரக்குடி, திருநள்ளாறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 9 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன், காரைக்கால் சாகுபடிக்கு தேவையான அளவு தண்ணீர் தற்போது வந்து சேர்ந்துள்ளதாகவும், மாவட்டத்திற்கு தேவையான தண்ணீரை தொடர்ந்து படிப்படியாக பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். காரைக்கால் விவசாயிகளின் நலனில் முதலமைச்சரும், விவசாயத்துறை அமைச்சர் என்ற முறையில் தானும் தொடர்ந்து துணை நிற்போம் என அவர் கூறினார்.
மேலும், விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் மற்றும் இடுபொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும், இயற்கை உரங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், செயற்கை உரங்களின் பயன்பாட்டை குறைக்கவும் விவசாயிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கான முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நீர்ப்பாசனப் பிரிவு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.