Times of Puducherry

மக்களின் உயிரோடு விளையாட்டு: இந்தியாவில் ஊடுருவிய போலி புற்றுநோய் மருந்து மாஃபியா கும்பல்.!

எழுதியவர்: Ramprasath S
1 நிமிட வாசிப்பு
16 Sep 2026 • 3:18 PM
bengaluru fake cancer drugs icu injection scam patients lives at risk

பெங்களூருவில் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்துள்ள போலி புற்றுநோய் மருந்துகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) ஊசி மருந்து மோசடி விவகாரம், ஒட்டுமொத்த மனிதகுல மனசாட்சியையும் உலுக்கியுள்ளது. மரணப் போராட்டத்திற்கு மத்தியில், மருத்துவத்தையும் மருந்துகளையுமே தங்களின் இறுதி நம்பிக்கையாக கொண்டிருக்கும் புற்றுநோய் நோயாளிகளின் உயிரோடு விளையாடும் இத்தகைய பாதகச் செயல் மன்னிக்க முடியாத கொடும் குற்றமாகும்.

பெங்களூருவின் தனியார் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில், காலாவதியான மருந்துகளை மறுபேக்கிங் செய்தும், தரம் குறைந்த மருந்துகளை முன்னணி மருந்து நிறுவனங்களின் போலி லேபிள்களை ஒட்டி 50 விழுக்காடு தள்ளுபடி விலையில் விற்பனை செய்ததும் அம்பலமாகியுள்ளது. அங்குள்ள 90-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கு இவை விநியோகிக்கப்பட்டதாகக் கூறி மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மாஃபியா கும்பலின் கள்ள வலைப்பின்னல் கர்நாடக எல்லைகளைத் தாண்டி தமிழ்நாடு, மகாராஷ்டிரா, அரியானா, இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் பரவியுள்ளதாக சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) தெரிவித்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டிலும் தொடர்புடைய இடங்களில் சோதனைகள் நடைபெற்றுள்ளதாக வெளியாகும் செய்திகள், தமிழக மக்களிடையே குறிப்பாக சிகிச்சையில் இருக்கும் புற்றுநோய் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இடையே மிகப்பெரிய அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மனித உயிர்களை விலையாக வைத்து லாபம் ஈட்டும் இந்த போலி மருந்து மாஃபியாக்களின் சதிவலை தமிழ்நாட்டின் எல்லைகளுக்குள் ஊடுருவியிருக்கிறதா? என்பதை துல்லியமாக கண்டறிந்து வேரறுக்க வேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கு உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மையங்கள் மற்றும் மொத்த மருந்து விநியோக கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள புற்றுநோய் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளின் உண்மைத்தன்மையை உடனடியாக தணிக்கை செய்ய வேண்டும். பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்குள் வரும் மருந்துகளின் கொள்முதல் ரசீதுகள் (Invoices), க்யூஆர் குறியீடு (QR Code) மற்றும் தொகுதி எண்களை (Batch Numbers) மருந்து கட்டுப்பாட்டுத் துறை தீவிரமாகச் சரிபார்க்க வேண்டும். போலி மருந்துகள் ஊடுருவலைத் தடுக்க மாநில எல்லைகள் மற்றும் மாவட்ட அளவிலான மருந்தகங்களில் தணிக்கை செய்ய சிறப்பு பறக்கும் படைகளை உடனடியாக அமைக்க வேண்டும்.

ஏழை, எளிய மக்களின் உயிரோடு விளையாடும் போலி மருந்து விற்பனையாளர்களோ அல்லது இடைத்தரகர்களோ தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி குண்டர் சட்டம் உள்ளிட்ட மிகக் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க வேண்டும். மக்களின் நல்வாழ்வும் நோயாளிகளின் உயிர் பாதுகாப்பும் எந்த நிலையிலும் சமரசத்திற்கு உட்படக்கூடாது. தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக முழுமையான விசாரணை நடத்தி, உண்மை நிலவரத்தை மக்களுக்கு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் அச்சத்தைப் போக்க வேண்டும் என பொதுமக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top