Times of Puducherry
வாளையூர் என்றாலும், நித்த விநோதபுரமாகிய வீரராசேந்திரபுரம் என்றாலும் , சண்பையான வீரராசேந்திரபுரம் என்றாலும் அது தற்போது வழக்கத்தில் உள்ள “ஜம்பை ” என்ற ஓரூரைத் தான் குறிக்கும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், வாணாபுரம் வட்டத்தில் அமைந்துள்ள ஓர் இயற்கை எழில் கொஞ்சும் ஊர்தான் ஜம்பை. இது தென்பெண்ணை ஆற்றின் வடகரையில் சிறு சிறு குன்றுகளும், மலையும், நெல்வயல்களும் சூழ்ந்த வளமிக்க ஊராகும். நடு நாட்டின் தலைநகராக விளங்கியத் திருக்கோவலூருக்கு வடமேற்கில் 19 கிலோ மீட்டர் தொலைவிலும், திருவண்ணாமலைக்குக் கிழக்கில் 25 கிலோ மீட்டர் தொலைவிலும், திருக்கோவலூர் – திருவண்ணாமலை வழித்தடத்தில் இருபது கிலோ மீட்டர் தொலைவிலும் சிறப்புமிக்க இவ்வூர் அமைந்துள்ளது.
சங்க காலத்தில் மலையமானின் தலைநகராக விளங்கிய திருக்கோவலூருக்கும், அதியமான் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த தகடூருக்கும் (தருமபுரி) இடையே இருந்த பெருவழியில் ஜம்பை அமைந்திருந்தது . ஜம்பை 2000 ஆண்டுகளுக்கு முன் திருக்கோவலூர் மன்னன் திருமுடிக்காரியின் ஆட்சிக்கு உட்பட்டப் பகுதியாக இருந்தது. பின்னர் பல்லவர் ஆட்சிக் காலத்தில் பல்லவர்களின் ஆளுகையின் கீழ் வந்தது. பல்லவர்களின் கீழ் ஆட்சி செய்த வாணகோ அரசர்களை வெற்றிக் கொண்டு இடைக்காலச் சோழர்கள் இப்பகுதியைக் கைப்பற்றி ஆட்சி புரிந்தனர்.
கற்காலம் தொடங்கித் தற்காலம் வரை பல அரிய வரலாற்றுச் சான்றுகளை உலகிற்கு அள்ளித் தரும் தொன்மை மிக்கதும், சைவம், சைனம், பெளத்தம், சாக்தம், ஆகிய சமயங்கள் செழித்திருந்ததும் இவ்வூரில் தான்! தற்போது ‘ஜம்பை’ என வழங்கிவரும் இவ்வூரின் தொடக்க காலப் பெயர் வாளையூர் நகரம் என்பதாகும். இங்குள்ள மிகப் பழமையான விஜயாலய சோழனின் கல்வெட்டில் ‘வாளையூர் நகரம்’ என்று வெட்டப்பட்டுள்ளது. பராந்தக சோழன் காலத்திலும் (கி.பி. 929- )(க. ஆ.அ. எண் 117/1906) இராட்டிட கூட மன்னன் கன்னரத் தேவன் (மூன்றாம் கிருஷ்ணன்) காலத்திலும் (கி.பி. 960 ) (க.ஆ.அ. எண். 97/1906) இவ்வூர் ‘வாளையூர் நகரம்’ என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதலாம் இராசராச சோழன் காலத்தில் இவ்வூர் ‘வாளையூராகிய நித்த விநோதபுரம்’ என்று வழங்கப்பட்டதை கல்வெட்டு அறிவிக்கிறது. வீரராசேந்திரன் காலத்தில் (கி.பி. 1068) இவ்வூர் ‘நித்த விநோதபுரமாகிய வீரராசேந்திர சோழபுரம்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. (க.ஆ.அ.எண். 100 / 1906) . பிறகு முதலாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் தான் (கி.பி. 1070-1120) இவ்வூர் ‘சண்பை’ என்றும் ‘சண்பையான வீரராசேந்திர சோழபுரம்’ என்றும் அழைக்கப்பட்டது. (க.ஆ.அ.எண்கள்.67,68,78/1906-429,430/1938) இரண்டாம் இராசராசன் காலத்தில் (கி.பி. 1150 – 1173) இவ்வூர் ‘சம்பை’ என அழைக்கப்பட்டது.(க.ஆ.அ. எண். 448/1938)
இதற்குப் பிறகு ஆட்சி செய்த குலோத்துங்கன், மூன்றாம் இராசராசன் (1216-1246), மூன்றாம் இராசேந்திரன் (1246 – 1274) ஆகியோர் காலங்களிலும் ‘சண்பையான வீரராசேந்திரபுரம்’ என்றே வழங்கி வந்துள்ளது. காடவ சிற்றரசன் கோப்பெருஞ்சிங்கன் (கி.பி. 1216 – 1242) காலத்திலும், பாண்டியர் மற்றும் விஜய நகர நாயக்கர்கள் ஆட்சியிலும் (கி.பி. 1336-1646) ’ சண்பையான வீரராசேந்திரபுரம்’ என்றே வழங்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.
இவ்வூரில் புதிய கற்காலக் கருவிகளும், பெருங் கற்காலத் தடயங்களும் கிடைத்துள்ளதால், இப்பகுதி 3500 ஆண்டுகளுக்கு முந்தைய தொல் பழங்கால வரலாற்றுச் சிறப்புப் பெற்ற நகரமாகும். இவ்வூரில் வயல்களுக்கு இடப்பட்டிருக்கும் ‘நத்தம்’ ‘மேல் நத்தக் கொல்லை’ ‘கீழ் நத்தக் கொல்லை’ ‘அகழிக் கொல்லை’ ‘ கூத்தாடிக் கழனி’ போன்ற பெயர்கள் ஜம்பை அக்காலத்தில் பெருநகராக இருந்துள்ளதை உறுதி செய்கின்றன. ‘கோட்டைக்கரை’ என்னும் மேட்டுக்கொல்லை 20 ஏக்கர் பரப்பளவில் தரைமட்டத்திலிருந்து இரண்டு முதல் மூன்று மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கோட்டைக் கரைமேட்டிலிருந்து ’ அழிமேடு’ இரண்டு மீட்டர் பள்ளத்தில் அமைந்துள்ளது. மேலும் இங்கு ஐந்து அடி நீளம் உள்ள பெருஞ்சுவரின் சிதைந்த பகுதிக் காணப்படுகின்றன. இவை 38 செ.மீட்டர் நீளமுள்ள செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.
ஜம்பை ஐம்புகேஸ்வரர் கோவில் கல்வெட்டுகளை வாசிக்கும் போது அக்காலத்தில் நடைமுறையில் இருந்த நீட்டல்,நிறுத்தல், முகத்தல் போன்ற அளவுகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும், மா, கோல், வேலி, பூமி, குழி, கழனி முதலிய நீட்டல் அளவுகளும், பலம், செம்பலம், கழஞ்சு முதலிய நிறுத்தல் அளவுகளும், உழக்கு, நாழி, மரக்கால், கலம், குறுணி, பதக்கு , தூணி முதலிய முகத்தல் அளவுகளும் அக்கால நடைமுறையில் இருந்துள்ளது தெரிகிறது . ஜம்பையில் பல்வேறு கல்வெட்டுகளில் நீட்டல் அளவுகள் பொறிக்கப்பட்டுள்ளது. வீரராசேந்திரனின் 6-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1068) 16 சாண் கோலால் அளந்து 500 குழி நிலம் வழங்கப்பட்டது.(க.ஆ.அ.எண்.100/1906) இது போல இவ்வூரில் 8 குழு நிலம், 92 குழி, 200 குழி, 400 குழி மற்றும் 500 குழிகள் தானம் கொடுத்துள்ளதை பல்வேறு கல்வெட்டுகளின் வழி நாம் அறியலாம். 3 1/2 வேலி நிலத்தினை இறையிலியாக வழங்கியதை இக்கோவில் அர்த்த மண்டபத்தின் வடக்குச் சுவரில் காணலாம் (க. ஆ.அ. எண் 74/1906)
கி.பி. 960 இல் மூன்றாம் கிருஷ்ணானின் (கன்னரதேவன்) ஆட்சியில் வெட்டப்பட்ட கல்வெட்டில்’ வடகரையூர் தான் தோன்றீஸ்வரத்து ஐஞ்நூற்றுவ வீதிவிடங்களுக்கு, இரண பீமமங்கலத்து சபையார், நீர்நில விலையாவணம் செய்து கொடுத்ததைக் கூறுகிறது. மேலும் அளவுகளாக’ ஒரு கழஞ்சரைப் பொன் கடி இரண்டு -எட்டு மாவும்’ என்று கூறப்பட்டுள்ளது. அச்சுததேவ மகாராயரின் நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் 60 அடி மனை ஒன்றுக் கொடுக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது.
முகத்தல் அளவை என்பது பொருட்களை முகந்து அளக்கும் அளவையாகும். தொல்காப்பியர் இவ் அளவையை’ பனையென அளவும்’ என்று கூறுகிறார். கலம், பதக்கு , தூணி, உரி, நாழி, உழக்கு, பனை, குறுணி, மரக்கால் போன்ற முகத்தல் அளவுகள் உள்ளன. இக்கோவில் அர்த்தமண்டபத்தின் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டில் எண்ணெய் அளவு பற்றி – அருண்மொழித் தேவன் (இராஜ ராஜ சோழன்) மரக்காலோடு ஒக்கும் (சமமாக) உழக்கால் நித்தம் உழக்கு எண்ணெய் விளக்கு எரிப்பதற்காக வழங்கியதாகக் கூறுகிறது. நிறுத்தல் அளவைகளாக, குன்றி மணி, வராகனெடை, பலம், வீசை, துலாமெனப் படிக்கல் கொண்டு தராசில் வைத்து நிறுப்பது ஆகும். இந்த எடுத்தப் அளவை, பொன்னாளவை, பிற பொருள்கள் அளவை என்று இருவகைப்படுகிறது. அரசு முத்திரை இட்ட அளவுக் கல்லானது, குடிஞைக்கல் , பாடிக்கல் பண்டாரக்கல் என்ற பெயர்களில் வழங்கப்பெறும் .
இக்கோவிலின் முன் மண்டபத் தெற்குச் சுவரில் உள்ள கி.பி. 1036 ஆண்டுக் கல்வெட்டில் 1029 பலம் எண்ணெய் திருத்தான் தோன்றிய மகாதேவருக்குக் கொடுக்கப்பட்டதைக் கூறுகிறது. பலம் என்ற முகத்தல் அளவு அன்று இருந்ததா? அல்லது எண்ணெய் நிறுத்து வழங்கப்பட்டதா என்று எண்ணும் வகையில் உள்ளது.
வரலாற்று ஆய்வாளர்கள் இந்த ஜம்புகேஸ்வரர் கோவில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு, பிறகு சோழர்கள் காலத்தில் கற்றளியாக( கற்கோவிலாக) புணரமைக்கப்பட்டதாகும். என்று கூறுகிறார்கள். பத்தாம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் இராட்டிரகூடர்களும் இக்கோவிலைப் புதுப்பித்துள்ளார்கள்.
இவ்வூர் கல்வெட்டுகளில் நாடுகள் இராசராச சோழன் ஆட்சிக் காலத்திலும், அவனுடைய மகன் முதலாம் இராசேந்திரன் ஆட்சிக் காலத்திலும் நாடுகள் வளநாடுகள் கூற்றம், ஊர் போன்ற தனித்தனிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, அளந்து கல்வெட்டுகளில் பதித்துள்ளார்கள். ஜம்பை (வாளையூர்) வாண கோப்பாடி நாட்டில் அமைந்திருந்தது. பல்லவர்களின் சிற்றரசர்களான வாணவர்கள் இப்பகுதியை ஆட்சி செய்தனர். வாணகோப்பாடி நாடு, ஆடையூர் நாடு, அண்ணா நாடு, செங்குன்ற நாடு, காந்தளூர் நாடு, கீழ்க்கொன்றை நாடு, மெய்க் குன்றநாடு, நரிப்பள்ளி நாடு, உடைக்காடு நாடு, விளையூர் நாடு, வாளையூர் நாடு என்று வாண கோப்பாடி நாடு பிரிக்கப்பட்டிருந்தது. மேலும், இராசராசன் காலத்திலும், இராசேந்திரன் காலத்திலும் வளநாடுகள் என்றும், இராசராசவளநாடு, இராசேந்திர வளநாடு, இராசேந்திர சோழ வளநாடு, மதுராந்தக வளநாடு, கங்கைகொண்ட சோழ வளநாடு, மெய்குன்றாத வளநாடு என்று பிரித்திருந்தனர். இக்கல் கல்வெட்டுகளில் அதிகமாக வாளையூர் நாடு, கீழ் கொன்றை நாடு, திருமுனைப்பாடி நாடு, குன்றத்தூர் நாடு, மிலாடாகிய மெய்குன்ற நாடு என்ற நாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
கல்வெட்டுகளில் உள்ள ஊர்ப்பெயர்கள் …
சீபாத நல்லூர், கொல்லை யூர், சுத்தமல்லிகை, இறையா நறையூர், குறிக்குடியான வீரசோழ நல்லூர், திருவரங்கம், நரியார் ஏந்தல், முடியனூர், வாளை வெட்டி, வனபுரம், குணமங்கலம், குளக்குடி, மாமந்தூர், பாடி நாவலூர், திருமேரூர், திருக்கூடர், பிரமதேயம், வதுளை, நல்லூர், இராவுத்தநல்லூர், வட் குடிவை, வேளாளர் கூடல், குணமங்கலமான வீர சோழ நல்லூர், தம்மபட்டி , ஆதனூர், சிறுவாங்கூர், ஆக்கைப்பாடி, பனந்தூர், கிளியூர், சிறு பனையூர், பள்ளிச் சந்தல் இதில் சில ஊர்கள் இன்றும் அதே பெயரில் உள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.