Times of Puducherry
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பேசிய அவர், “முதல்வர் விஜய் லண்டனுக்கு போனதை பற்றியே பேச நான் விரும்பவில்லை. நான் பேசுவது முதல்வர் லண்டனுக்கே போக வேண்டாம் என்று பேசுகிறேன். லண்டனுக்கு பெரிய கூட்டத்தை கூட்டி கொண்டு போய், அவரை சந்தித்தார், இவர் எட்டி பார்த்தார், எதுக்கு இந்த வேலை எல்லாம்? இது எல்லாம் தேவை இல்லாத அரசியல். நான் யாரையும் காயப்படுத்துவதற்காக குறிப்பிடவில்லை.
லண்டனில் எந்த பணமும் கிடையாது. லண்டன்லேயே பொருளாதாரம் இல்ல, அவன் எப்படி நம்மகிட்ட போடுவான்? இந்தியாவில் தொழிலதிபர்களிடம் பேசி முதலீட்டை ஈர்க்கலாம். லண்டனில் மகேந்திரா உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள் தான் அதிகப்படியான பணத்தை முதலீடு செய்து கொண்டு இருக்கிறது. கூகுளில் கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்து இருக்கிறார்கள் என்று பாருங்கள்.
சென்னையில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தை பிடித்து லண்டனுக்கு செல்வதை விட, சென்னையில் இருந்து இண்டிகோ விமானத்தை பிடித்து கோவை, மதுரைக்கு வர வேண்டும். இங்கு இருக்கும் தொழில் அதிபர்களை உட்கார வைக்க வேண்டும். அவர்களிடம் நீங்கள் உற்பத்தியை அதிகரித்தால் 50 சதவீதம் வரி கட்ட வேண்டாம்; அரசு கட்டும் என்று சொல்லுங்கள்.
உள்ளூர் தொழிலதிபர்களே தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஊக்கத்தை கொடுத்தால் இந்த அரசை நான் பாராட்டுகிறேன். முதலீட்டை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்வது பழைய காலத்து அரசியல்; உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்த முதல்வர் விஜய் முயற்சி எடுக்க வேண்டும். லண்டனை விட இந்திய பொருளாதாரம் பெரியது.
சபாநாயகர் முதல் தவெக சட்டமன்ற உறுப்பினர் வரை, தாங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளும் இடமாக, சட்டமன்றம் மாறியிருக்கிறது. தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை செயல்பாடுகள், மக்களைக் கோவிலுக்கு வரவிடாமல் தடுப்பதாகவே இருக்கின்றன. மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் அதற்கு ஒரு உதாரணம். நாம் ஆட்சிக்கு வரும்போது, தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை நீக்கப்படும்.
நாம் அரசியல் இயக்கமாக மாறுவது உறுதி; அமைப்பு பொதுச்செயலாளரை நியமித்துள்ளோம். அந்த காலம் நான் நினைத்ததை விட மிக மிக வேகமாக வந்து கொண்டு இருக்கிறது. நான் நேரம் ஆகுமோ என்று நினைத்தேன். தொண்டர்கள் பக்குவப்பட வேண்டும். நிறைய தலைவர்கள் உருவாக வேண்டும். நமக்கு இவ்வளவு தலைவர்கள் கிடைக்க வேண்டும்.
234 தொகுதிகளுக்கும் கீழே நாம் படர்ந்து போய் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இன்றைக்கு உங்களோடு தோள் நின்று தோளோடு பார்க்கும் போது நினைத்ததை விட வேகமாக நடந்து கொண்டு இருக்கிறது. மிக விரைவில் இது அரசியல் இயக்கமாக மாற தான் போகிறது; இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.