Times of Puducherry
முன்னாள் செய்தி வாசிப்பாளர் ஒருவருக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் தெரிவித்ததாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் தொடரப்பட்ட வழக்கில், யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
முன்னாள் செய்தி வாசிப்பாளரும் வழக்கறிஞருமான பெண் ஒருவர், சவுக்கு சங்கர் தனது ‘சவுக்கு’ இணையதளத்தில் தம்மைப் பற்றி அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறி கடந்த 2013-ஆம் ஆண்டு முதன்முறையாக புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, சங்கரும் அவரது கூட்டாளிகளும் தமக்கு மிரட்டல் விடுத்ததாகவும், போலி ஆவணங்களைத் தயாரித்ததாகவும் குற்றம் சாட்டி எழும்பூர் நீதிமன்றத்தில் அந்த பெண் வழக்குத் தொடர்ந்தார்.
பெண் தரப்பில், சவுக்கு சங்கர் திட்டமிட்டு அவர் மீது அவதூறு குற்றச்சாட்டுகளைப் பரப்பி, மிரட்டல் விடுத்ததால் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இருப்பினும், சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் வாதிடுகையில், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் புகார்களும் முற்றிலும் பொய்யானவை என்று தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்கள் முடிந்தபிறகு இன்று தீர்ப்பளித்த கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் (ACMM) சிவசக்தி, தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4-ன் கீழ் சவுக்கு சங்கர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். மேலும், இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக அவருக்கு 30 நாட்கள் அவகாசமும் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.