Times of Puducherry
புதுச்சேரியில் பெருகிவரும் பாலியல் குற்றங்கள் மற்றும் கொலை கொள்ளை ஆகிய குற்ற சம்பவங்களை கண்டுகொள்ளாத புதுச்சேரி அரசை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் பொதுமக்கள் புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக குற்றம்சாட்டி, உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு அரசு உரிய மருத்துவ மற்றும் மனநல உதவிகளை வழங்க வேண்டும் என்றும், சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், புதுச்சேரியில் காவல்துறைக்கு போதிய ஆட்கள் மற்றும் ரோந்து வாகனங்களை வழங்கி சட்டம்-ஒழுங்கை பலப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் தொடர்வதாகவும், அரசு நிர்வாகத்தில் மெத்தனப்போக்கு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் நேரு எம்எல்ஏ குற்றம்சாட்டினார். இதே நிலை தொடர்ந்தால் பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்புகளை ஒன்றிணைத்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.