Times of Puducherry

வாட்டர் பாட்டில்களின் மூடிகள் வெவ்வேறு நிறங்களில் இருப்பது ஏன்? இதன் பின்னால் உள்ள அறிவியல் தெரியுமா?

எழுதியவர்: Ramprasath S
1 நிமிட வாசிப்பு
30 Sep 2026 • 5:14 PM
water bottle cap colors meaning science behind different colored caps explained

Water Bottle Cap Color Meaning: தண்ணீர் பாட்டில்களில் மூடிகள் வெவ்வேறு நிறங்களில் இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? இது வெறும் டிசைன் அல்லது அழகுக்கானது மட்டும் கிடையாது. அதன் பின்னால் மிகப்பெரிய அறிவியலே உள்ளது. 

Water Bottle Cap Color Meaning

கடைகளில் விற்கப்படும் தண்ணீர் பாட்டில்களின் மூடிகள் வெள்ளை, பச்சை, கருப்பு, நீலம் என வெவ்வேறு நிறங்களில் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இது வெறும் டிசைனுக்காகவோ அல்லது அழகுக்காகவோ செய்யப்படுவது கிடையாது. இது அந்த பாட்டிலில் உள்ள தண்ணீரின் வகை, அதன் சுத்திகரிப்பு முறை ஆகியவற்றைக் குறிக்கும் உலகளாவிய தரக்கட்டுப்பாட்டு அடையாளமாகும். தண்ணீர் மூடிகளின் வகையைப் பொறுத்து அது எந்த வகையான தண்ணீர் என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

நீல நிறம்

சந்தையில் மிகவும் பரவலாக கிடைக்கும் தண்ணீர் பாட்டில்களின் மூடிகள் நீல நிறத்திலேயே இருக்கின்றன. இதன் உள்ளே இருப்பது சுத்திகரிக்கப்பட்ட குடிநீராகும். ஒரு நிலத்தடி நீரானது தலைகீழ் சவ்வூடு பரவல் மூலம் காய்ச்சி வடிக்கப்பட்டு, புற ஊதாக் கதிர்கள் மூலம் அசுத்தங்கள் நீக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டதை குறிக்கிறது. இதில் மனித உடலுக்குத் தேவையான தாதுக்கள் செயற்கையாக சேர்க்கப்பட்டிருக்கலாம்.

வெள்ளை நிறம்

வெள்ளை நிற மூடிகளைக் கொண்ட பாட்டில்கள் பொதுவாக காய்ச்சி வடித்த தண்ணீர் அல்லது குறிப்பிட்ட சுத்திகரிப்புக்கு உட்பட்ட நீரை குறிக்கிறது. இதில் அசுத்தங்கள் மட்டுமின்றி, இயற்கையான தாதுக்களும் முழுமையாக நீக்கப்பட்டிருக்கும். இது குடிக்க பயன்படுவதை விட ஆய்வகங்கள், மருத்துவமனைகள், வாகனங்களின் பேட்டரிகள், நீராவி அயர்ன்கள் போன்றுவற்றில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் சில நிறுவனங்கள் சாதாரண குடிநீருக்கும் இந்த நிறமூடிகளை பயன்படுத்துவதுண்டு.

பச்சை நிறம்

பச்சை நிறம் இயற்கையை குறிப்பது போன்றது ஆகும். இயற்கை மலை ஊற்றுக்கள், நிலத்தடி நீர் நிலைகள், பனிப்பாறைகளிலிருந்து உருகி வரும் நீர் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்படும் நீரின் பாட்டில்களுக்கு பச்சை நிற மூடிகள் பொருத்தப்படுகின்றன. இது செயற்கையாக சுத்திகரிக்கப்படாமல் இயற்கையான முறையில் வடிகட்டப்பட்டு உடலுக்கு நன்மை பயக்கும் கால்சியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புக்களுடன் பாட்டிலில் அடைக்கப்படுகிறது.

கருப்பு நிறம்

சமீபகாலமாக கருப்பு நிற பாட்டில்கள் பிரபலமடைந்து வருகிறது. பொதுவாக ஆல்கலைன் நீருக்கு கருப்பு நிற முடிகள் பயன்படுத்தப்படுகிறது. இதில் தண்ணீரின் PH அளவு சாதாரணத்தை விட அதிகமாக இருக்கும். இதில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் அதிகப்படியான தாதுக்கள் நிறைந்துள்ளது. விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் நீரேற்றத்திற்காக இந்த வகை குடிநீரை பயன்படுத்துகிறார்கள். இது சாதாரண பாட்டில்களை காட்டிலும் விலை உயர்ந்ததாகவும் உள்ளது.

சிகப்பு நிறம்

சிகப்பு நிற முடிகள் கொண்ட பாட்டில்களில் அடைக்கப்படும் தண்ணீர், சோடா அல்லது கார்பனேற்றப்பட்ட தண்ணீரைக் குறிக்கிறது. இதில் கார்பன் டை ஆக்சைடு வாய்வு செலுத்தப்பட்டிருக்கும். சாதாரண தண்ணீருக்குப் பதிலாக சற்று சுவையூட்டப்பட்ட அல்லது வாயு நிரப்பப்பட்ட தண்ணீரை குறிப்பதற்காக சிகப்பு நிற மூடிகள் பயன்படுத்தப்படுகின்றன.

பெரும்பாலான சர்வதேச மற்றும் முன்னணி நிறுவனங்கள் இந்த வண்ண குறியீட்டு முறையை சரியாக பின்பற்றி வருகின்றன. இருப்பினும் அனைத்து உள்ளூர் நிறுவனங்களும் இதை கட்டாயமாக பின்பற்றுவது இல்லை. சில நேரங்களில் பிராண்டின் வடிவமைப்புக்கு ஏற்றவாறு வெவ்வேறு வண்ணங்களை பயன்படுத்துகின்றன. எனவே பாட்டில்களின் மூடிகளை மட்டும் பார்த்து வாங்காமல், பாட்டிலில் லேபிள் விவரங்களைப் படிப்பது மிகவும் பாதுகாப்பானது. 

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top