Times of Puducherry

Vishwakarma Jayanti 2026: தொழிலில் அம்பானியாக வேண்டுமா? விஸ்கர்மா ஜெயந்தியில் இந்த பூஜையை மறக்காமல் செய்யுங்கள்.!

எழுதியவர்: Ramprasath S
1 நிமிட வாசிப்பு
16 Sep 2026 • 3:17 PM
viswakarma pooja september 2026 date time significance and worship rituals

விஸ்வகர்மா ஜெயந்தி 2026

இந்து மதத்தின்படி விஸ்வகர்மா தேவர்களின் கைவினைராகவும், கட்டிடக்கலைஞராகவும், கட்டுமானக் கலையின் தந்தையாகவும் வணங்கப்படுகிறார். இவர் தேவர்களுக்கான அரண்மனைகளையும், ஆயுதங்களையும், தெய்வீக நகரங்களையும் கட்டினார் என்று நம்பப்படுகிறது. விஸ்வகர்மா உலக படைப்பின் முதன்மைப் பொறியாளராக கருதப்படுகிறார். இந்திரலோகம், துவாரகை, லங்கா போன்ற நகரங்களையும், வஜ்ராயுதம் போன்ற தேவ ஆயுதங்களையும் இவரே உருவாக்கினார்.

கன்னி சங்கராந்தி

ஒவ்வொரு ஆண்டும் சூரியன் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பிரவேசிக்கும் ‘கன்னி சங்கராந்தி’ நாளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. பொறியாளர்கள், கட்டிடக் கலைஞர்கள், கணினி வல்லுனர்கள், நெசவாளர்கள் மற்றும் அனைத்து தொழில் செய்பவர்களும் தங்கள் உபகரணங்களுக்கு நன்றி செலுத்தி, தொழிலில் புதிய நுட்பங்களும், வெற்றியும் பெற விஸ்வகர்மா ஜெயந்தி நாளில் சிறப்பு வழிபாடுகளை செய்ய வேண்டும். வேலை செய்யும் இடத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கவும், இயந்திரங்கள் தடையின்றி இயங்கவும், விஸ்வகர்மாவின் அருளைப் பெறவும் இந்த பூஜை செய்யப்படுகிறது.

விஸ்வகர்மா பூஜை செய்ய உகந்த நேரம்

இந்த ஆண்டு சூரிய பகவான் செப்டம்பர் 17ஆம் தேதி சிம்ம ராசியிலிருந்து காலை 7:58 மணியளவில் கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். எனவே விஸ்வகர்மா பூஜை செய்ய உகந்த நேரம் காலை 7:58 முதல் மதியம் 12:40 வரையாகும். அபிஜித் முகூர்த்தம் காலை 11:51 மணிக்கு தொடங்குவதால் இந்த நேரத்தில் பூஜை செய்வது மிகவும் சிறப்பு. பூஜை செய்வதற்கு முன்னர் தொழிற்சாலை, பட்டறை, அலுவலகம், வீட்டில் இருக்கும் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சுத்தம் செய்ய வேண்டும்.

பூஜை முறைகள்

இயந்திரங்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மாலை சாற்றி அலங்கரிக்க வேண்டும். ஒரு மனையில் விஸ்வகர்மா பகவானின் உருவப்படம் அல்லது சிலையை வைத்து பூக்களால் அலங்கரித்து, பூக்கள் மற்றும் மலர்கள் சாற்ற வேண்டும். சுண்டல், பழங்கள், பொரிகடலை, இனிப்புகள் ,பாயாசம் படைக்க வேண்டும். பின்னர் தூப தூபம் காட்டி கருவிகளுக்கு அட்சதை தூவி தொழில் சிறக்கவும், விபத்துக்கள் நிகழாமல் இருக்கவும் வேண்டி விஸ்வகர்மா பகவானுக்கு ஆரத்தி காட்ட வேண்டும். பூஜை முடிந்த பிறகு ஊழியர்கள், தொழிலாளர்கள், உறவினர்களுக்கு பிரசாதங்களை அளிக்கலாம். இயன்றவர்கள் ஏழை, எளியவர்களுக்கு அன்னதானமும் வழங்கலாம்.

படைப்பு, கட்டுமானம் மற்றும் தொழில்நுட்பத் திறனின் சின்னமாக விளங்கும் விஸ்வகர்மா பெருமானை முறையான சடங்குகளுடன் வழிபடுவது பணியிடத்தில் வெற்றி, முன்னேற்றம், மற்றும் செழிப்புக்கான வாய்ப்புகளை வழங்கும் என்று நம்பப்படுகிறது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top