Times of Puducherry
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்து வெற்றியை தேடி கொடுத்த விராட் கோலி சில சாதனைகளை தகர்த்துள்ள நிலையில், தான் எப்போதும் சாதனையை நோக்கி விளையாடுவது இல்லை என்று கூறியுள்ளார்.
இந்தியா வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி நேற்று முன்தினம் திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்றது, இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணையித்த 296 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 42 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
விராட் கோலி 88 பந்துகளில் 139 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார். இதில் 10 பவுண்டரி 9 சிக்சர்கள் அடங்கும். இது அவரது சர்வதேச வாழ்க்கையின் 86-வது சதமாகும். இதன் மூலம் விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் 15,000 ரன்கள் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். மேலும் ஒருநாள் போட்டிகளில் விரைவாக 15,000 ரன்கள் எடுத்தவர், உள்நாட்டில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனை படைத்துள்ளார். இந்தியாவில் மட்டும் விராட் கோலி 7006 ரன்கள் குவித்துள்ளார்.
இது குறித்து பேசிய விராட் கோலி, சச்சின் டெண்டுல்கருடனான ஒப்பீடுகள் மற்றும் சாதனைகள் குறித்துப் பேசுகையில், சச்சின் எப்போதும் எனக்கு சச்சின் தான், அவரது பெருமை எண்களுக்கு அப்பாற்பட்டது என்று கூறியுள்ளார். ‘என்னைப் பொறுத்தவரை சச்சின் எப்போதும் சச்சின் தான். எனது முதல் கேப்டன் என்ற முறையில் எம்.எஸ். தோனியும் எப்போதும் தோனி தான். மனதிற்குள் இந்த விஷயங்கள் ஒருபோதும் மாறாது. மிகப்பெரிய சாதனைகளைப் படைத்த பெரிய ஆள் நான் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் வந்ததில்லை.’
நான் மற்றவர்களை விடச் சிறந்தவன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை, கிரிக்கெட்டிற்காகக் கடினமாக உழைக்கவும் சரியான விஷயங்களைச் செய்யவும் மட்டுமே எப்போதும் முயற்சிக்கிறேன். கிரிக்கெட் போட்டியில் சச்சின் ஏற்படுத்திய புரட்சியும், மக்களின் மனதில் அவர் உருவாக்கிய தாக்கமும் எண்களுக்கும் ஒப்பீடுகளுக்கும் அப்பாற்பட்டது. அதேபோல் இதுபோன்ற சாதனைகள் மீது எனது கவனம் ஒருபோதும் இருந்தது இல்லை. சூழலை புரிந்துகொண்டு களத்தில் எனது வேலையை செய்வதுதான் ஒரே நோக்கம் என்று கூறியுள்ளார்.
2027 ஒருநாள் உலகக்கோப்பையைக் குறிவைத்து கோலி தற்போது சிறந்த ஃபார்மில் விளையாடி வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் (55) அடித்த வீரர் என்ற சாதனையும் தற்போது கோலியின் பெயரிலேயே உள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.