Times of Puducherry

'மதச் சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி': விஜய் தலைமையிலான புதிய கூட்டணிக்கு பெயர் அறிவிப்பு

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
9 Sep 2026 • 6:36 PM

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றிபெற்ற விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தனிப்பெரும் கட்சியாக உருவானது. ஆனாலும், ஆட்சியமைக்கத் தேவையான எண்ணிக்கையைப் பெறாத நிலையில் தி.மு.க கூட்டணியில் 5 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் த.வெ.க-வுடன் கூட்டணியில் இணைந்தது. மேலும் கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் (வி.சி.க), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யு.எம்.எல்) என தி.மு.க கூட்டணியில் இருந்த கட்சிகள் ஆதரவைப் பெற்று விஜய் முதல்வரானார்.

இதில் வி.சி.க ஐ.யு.எம்.எல் கட்சிகள் த.வெ.க அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிலையில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய 2 கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன. இந்நிலையில், த.வெ.க தலைமையில் புதிய கூட்டணியை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதற்கான முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூலை 1-ம் தேதி சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடந்தது. அந்த கூட்டத்தில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் பங்கேற்றது. வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வருவதால் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்த கட்சிகளின் 2-ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக கட்சி தலைமை அலுவலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் மாலை 4 மணிக்கு இக்கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஏற்கனவே காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவற்றுக்கு தவெகவின் மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களுமான ஆனந்த். ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோர் நேரில் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்தன.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி எம்.பி., சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பர்ட், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ எம்.பி., இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன், அமைச்சர் ஷாஜகான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி., சிந்தனைச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த கூட்டம் நடைபெற்ற நிலையில், த.வெ.க தலைமையிலான கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கூட்டணி தலைவராக முதலமைச்சர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top