Times of Puducherry
தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் அரசுமுறைப் பயணமாக முதல்வர் விஜய் இங்கிலாந்து சென்றுள்ளார். லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் சென்றடைந்த அவருக்கு, அங்கு வசிக்கும் தமிழர்கள் மற்றும் த.வெ.க. நிர்வாகிகள் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதலீடுகளை ஈர்ப்பதே முக்கிய நோக்கம்
தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்து, உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே விஜய்யின் இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது. மேம்பட்ட உற்பத்தி, மோட்டார் வாகனங்கள், மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களை அவர் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
சில்வர்ஸ்டோன் கார் பந்தயம்
விஜய்யின் இங்கிலாந்து பயணத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத் திடலில் நடைபெறும் மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயம் அமைந்துள்ளது. இந்தப் போட்டியை முதல்வர் விஜய் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இந்தப் போட்டியில் நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்குமார் பங்கேற்கிறார். இந்தியாவைச் சேர்ந்த முன்னணி கார் பந்தய வீரர்களும் இதில் கலந்து கொள்கின்றனர். இந்திய நேரப்படி இரவு 9.45 மணிக்கு போட்டி தொடங்கி, இரவு 11.45 மணிக்கு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜித்தை ஆரத்தழுவி வாழ்த்து
கார் பந்தயத்தை தொடங்கி வைப்பதற்காக சில்வர்ஸ்டோன் சுற்றுப்பாதைக்கு சென்ற முதல்வர் விஜய், அங்கு அஜித்குமாரை சந்தித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக் கொண்டனர். பின்னர், கார் பந்தயத்தில் வெற்றி பெற அஜித்துக்கு விஜய் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து விஜய்யும் அஜித்தும் இணைந்து ரசிகர்களை நோக்கி கையசைத்தனர். இந்தக் காட்சியை நேரில் பார்த்த இங்கிலாந்து வாழ் தமிழர்களும் ரசிகர்களும் உற்சாகமடைந்தனர். விஜய் – அஜித் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.