Times of Puducherry
புதுச்சேரியில் பழுதடைந்த மின்கம்பம் விழுந்து 5 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக ஆளுநரை சந்தித்து பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து கோரிக்கை வைக்க நேரம் கேட்டும் அனுமதி வழங்கப்படவில்லை என சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், “இது எனது தனிப்பட்ட பிரச்சனை அல்ல; ஒரு குழந்தையின் உயிரிழப்பு தொடர்பான பொதுமக்களின் பிரச்சனை” என தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, ஸ்மார்ட் சிட்டி என ஒவ்வொரு துறையினரும் வெவ்வேறு விளக்கங்களை அளிப்பதாக கூறிய விக்னேஷ் கண்ணன், “மின்கம்பத்தை பராமரிக்க வேண்டிய பொறுப்பு யாருடையது என்பதே தெரியவில்லை. அதிகாரிகள் ஒருவர் மீது ஒருவர் பொறுப்பை சுமத்தாமல், சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகளை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
மேலும், புதுச்சேரி முழுவதும் பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய கட்டமைப்புகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், குழந்தையின் உயிரிழப்புக்கு பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். “பொதுமக்களின் உயிருக்கு இங்கு யார் உத்தரவாதம்? யார் பொறுப்பேற்பது?” என கேள்வி எழுப்பிய விக்னேஷ் கண்ணன், இந்த விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை என்றும், பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே குரல் எழுப்புவதாகவும் தெரிவித்தார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.