Times of Puducherry
கடலூர் மாவட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் நெல் மூட்டைக்கு ₹55 வரை கூடுதல் கட்டணமாகக் கையூட்டு வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் அரசு உயரதிகாரியிடம் நேரில் பகிரங்கமாக முறையிட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. என தமிழக வாழ்வுரிமைக் கட்சி.தலைவர், வேல்முருகன், கண்டனம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, கடலூர் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும் வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலாளருமான பெ. அமுதா கள ஆய்வு மேற்கொண்டபோதே, பாதிக்கப்பட்ட விவசாயிகள் இப்புகாரை நேருக்கு நேராக முன்வைத்துள்ளனர். இப்புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
இரவும் பகலும் பாடுபட்டு விளைவித்த நெல்லை அரசே கொள்முதல் செய்யும் நிலையில், அதற்கே விவசாயிகளிடம் மூட்டைக்கு ₹55 வரை கூடுதல் தொகை பறிப்பது எந்த வகையில் நியாயம்?, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அதிகாரப்பூர்வ நடைமுறையை மீறி, சட்டவிரோதமாகப் பணம் வசூலிக்க இவர்களுக்கு அதிகாரம் அளித்தது யார்?, விவசாயிகளைச் சுரண்டும் இந்த நபர்கள் யார்?, இவர்களுக்குப் பின்னணியாக இருந்து துணைபோகும் அரசியல் செல்வாக்கு கொண்ட நபர்கள் யார்? இந்தப் புகாரில் குறிப்பிட்ட அரசியல் பிரமுகர்களின் தலையீடு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அரசு இதில் பாரபட்சமற்ற வெளிப்படையான விசாரணையை நடத்தி உண்மையை நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
உழவர்களைச் சுரண்டும் இத்தகைய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் தயவுதாட்சண்யமின்றிச் சட்டப்படி சிறையிலடைக்கப்பட வேண்டும். ஏற்கெனவே, கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ₹50 முதல் ₹60 வரை வசூலித்த புகாரில் பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகும், மீண்டும் அதே முறைகேடு தொடர்வது நிர்வாகத்தின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது.
எனவே, ஊழலற்ற நிர்வாகம். விவசாயிகளுக்கு எவ்விதத் தொல்லையுமில்லை என வெற்று அறிக்கைகளோடு கடந்துவிடாமல், ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் கண்காணிப்புக் குழுக்களை அமைத்து முறைகேடுகளைத் தடுக்க வேண்டும். விவசாயிகளிடம் சட்டவிரோதமாக ஒரு பைசாகூடப் பறிக்கப்படாத நிலையைத் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும்.
உழவர்களின் வியர்வைக்குரிய நியாயமான விலையை முழுமையாக வழங்குவதே அரசின் தலையாய கடமை. மாறாக, அவர்களது உழைப்பை இடைத்தரகர்களும் அதிகார வர்க்கமும் சுரண்டுவதை ஒருபோதும் தமிழ்நாடு அரசு அனுமதிக்க கூடாது எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.