Times of Puducherry
தமிழீழ அடையாளத்தைப் பெருமையுடன் பதிவு செய்த சகோதரி மைத்ரேயி ராமகிருஷ்ணன் அவர்களுக்குத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உறுதியான ஆதரவு கொடுக்கப்படும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார் . நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட உலகளாவிய கலைத் தளங்களில் முதன்மைப் பாத்திரமேற்று, தனது தனித்துவமான திறமையால் சர்வதேசப் புகழ்பெற்ற ஈழத் தமிழ்க் குடும்பப் பின்னணியைக் கொண்ட நடிகை சகோதரி மைத்ரேயி ராமகிருஷ்ணன் அவர்கள், தனது தமிழீழப் பூர்வீகத்தை உலக அரங்கில் வெளிப்படையாகவும் பெருமையுடனும் பதிவு செய்துள்ளார்.
ஒருவர் தனது பூர்வீக வரலாறு, மொழி, பண்பாடு ஆகியவற்றுடன் கொண்டுள்ள தொடர்பை வெளிப்படுத்துவது அவருடைய அடிப்படை உரிமையாகும். அந்த உரிமையைப் பயன்படுத்தியதற்காக அவரை இழிவுபடுத்துவதோ, அச்சுறுத்துவதோ, வெறுப்புப் பிரச்சாரத்திற்கு உள்ளாக்குவதோ ஏற்றுக்கொள்ள முடியாது.
கருத்து வேறுபாடு இருப்பின், அதனைச் சனநாயக வழியில் வெளிப்படுத்தலாம். ஆனால், அவரது ஈழத் தமிழ்ப் பின்னணியைக் குறிவைத்து தனிநபர் தாக்குதல்களை மேற்கொள்வதும், அவர் பங்கேற்ற கலைப் படைப்புகளைப் புறக்கணிக்க அழைப்பு விடுப்பதும் கருத்துச் சுதந்திரத்திற்கும் கலைச் சுதந்திரத்திற்கும் எதிரான செயல்களாகும்.
தாயகத்தை விட்டு புலம்பெயர்ந்தாலும், தலைமுறைகள் கடந்தும் மொழி, பண்பாடு, வரலாற்று நினைவுகள் தொடர்கின்றன. அந்தத் தொடர்பை வெளிப்படுத்துவதற்காக எவரையும் குற்றவாளியாக்க முடியாது.
இந்நிலையில், சகோதரி மைத்ரேயி ராமகிருஷ்ணன் அவர்களின் தமிழீழப் பூர்வீகத்தை இழிவுபடுத்தி, சிங்கள இனவெறியர்களும், சிங்கள அரசுக்கு ஆதரவானவர்களும் பொது வெளியிலும் சமூக ஊடகங்களிலும் அவதூறு பரப்புவதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. உலகெங்கும் வாழும் 12 கோடி தமிழர்களும் ஒன்றுபட்டு, சகோதரி மைத்ரேயி அவர்களுக்கு உறுதுணையாக நின்று, அவரது உரிமைகளைப் பாதுகாக்கச் சனநாயக வழியில் குரல் கொடுக்க வேண்டும்.
ஒருவரின் வாழ்விடம் மாறியிருக்கலாம். குடியுரிமை மாறியிருக்கலாம். ஆனால், தனது வேர்களையும் பண்பாட்டு மரபையும் நினைவுகூறும் உரிமையை எவராலும் பறித்துவிட முடியாது. சகோதரி மைத்ரேயி அவர்களின் குரலை ஒடுக்க முயலும் பிற்போக்குத்தனத்திற்கு எதிராக, அவருடைய உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும், இணையவழி அச்சுறுத்தல்கள் மற்றும் அவதூறுகளுக்கு உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.