Times of Puducherry
இந்திய ரயில்வேயின் பிரீமியம் ரயில்கள் என்று கூறினாலே நம் நினைவுக்கு வருவது பாரம்பரியமிக்க ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மற்றும் நவீன தலைமுறையின் வந்தே பாரத் ரயில்கள்தான். வேகம், படுக்கை வசதி, உணவு மற்றும் பயணம் தரும் வசதிகள் வரை இவை இரண்டும் இரண்டு வேறுபட்ட பயண அனுபவங்களை வழங்குகின்றன. வந்தே பாரத் ஸ்லீப்பர் (Vande Bharat Sleeper) ரயில்களும் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இவ்விரண்டு ரயில்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் மற்றும் அம்சங்கள் குறித்து இங்குப் பார்க்கலாம்.
தோற்றமும் வரலாற்று பின்னணியும்
ராஜ்தானி எக்ஸ்பிரஸ்: 1969-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ராஜ்தானி எக்ஸ்பிரஸ், டெல்லியையும் நாட்டின் பிற முக்கிய நகரங்களையும் இணைக்கும் நீண்ட தூர இரவு நேரப் பயணங்களுக்காக (Overnight Travel) வடிவமைக்கப்பட்ட புகழ்பெற்ற சேவையாகும்.
வந்தே பாரத்: 2019-ஆம் ஆண்டு முதன்முதலாக (டெல்லி – வாரணாசி) தொடங்கப்பட்ட வந்தே பாரத், நகரங்களுக்கு இடையே வேகமான பகல்நேரப் பயணங்களுக்காக குளிர்சாதன இருக்கை (AC Chair Car) வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.
ரயிலின் வேகம்
வந்தே பாரத்: தகுதியான பாதைகளில் (எடுத்துக்காட்டாக துக்ளகாபாத் – ஆக்ரா பிரிவு) மணி நேரத்திற்கு 160 கி.மீ வேகம் வரை செல்லக்கூடியது. சோதனை ஓட்டத்தின் போது இது 183 கி.மீ வேகம் வரை எட்டியுள்ளது.
ராஜ்தானி எக்ஸ்பிரஸ்: பொதுவாக இதன் அதிகபட்ச இயக்க வேகம் மணி நேரத்திற்கு 130 கி.மீ ஆகும்.
பயணக் கட்டமைப்பு மற்றும் இருக்கை வசதி
ராஜ்தானி எக்ஸ்பிரஸ்: நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்றவாறு படுக்கை வசதிகளுடன் (First AC, 2nd AC, 3rd AC) கூடியது. பயணிகள் மாலையில் ஏறி, இரவு உணவு சாப்பிட்டு, படுத்து உறங்கி மறுநாள் காலையில் இலக்கை அடைய முடியும்.
வந்தே பாரத்: வழக்கமான வந்தே பாரத் ரயில்கள் பகல்நேரப் பயணங்களுக்கான இருக்கை வசதிகளை (Chair Car & Executive Chair Car) மட்டுமே கொண்டுள்ளன. இருப்பினும், தற்போது நீண்ட தூரப் பயணங்களுக்கான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களும் பயன்பாட்டிற்கு வந்து கொண்டு இருக்கின்றன.
உணவு உபசரிப்பு (Food & Catering)
வந்தே பாரத்: ஐஆர்டிசிடி (IRCTC) மூலம் உணவு வழங்கப்படுகிறது. பயண நேரத்திற்கு ஏற்ப டீ, காலை உணவு, மதிய உணவு, மாலை நேர சிற்றுண்டி மற்றும் இரவு உணவு ஆகியவை பரிமாறப்படுகின்றன. தேவைப்படாதவர்கள் டிக்கெட் முன்பதிவின் போதே உணவைத் தவிர்க்கும் (Opt-out) வசதியும் உண்டு.
ராஜ்தானி எக்ஸ்பிரஸ்: நீண்ட தூரப் பயணம் என்பதால், பாரம்பரியமாகவே விரிவான மற்றும் பலநேர உணவு உபசரிப்பு அட்டவணையை ராஜ்தானி கொண்டுள்ளது.
நவீன வசதிகள் மற்றும் தொழில்நுட்பம்
வந்தே பாரத்: தானியங்கி கதவுகள் (Automatic Doors), சிசிடிவி (CCTV), ஜிபிஎஸ் அடிப்படையிலான தகவல் திரைகள், பயோ-வேகம் கழிவறைகள் மற்றும் நவீன இருக்கைகளுடன் கூடிய புதிய தலைமுறை ரயிலாகும்.
ராஜ்தானி எக்ஸ்பிரஸ்: பழமையான சேவையாக இருந்தாலும், பெரும்பாலான ராஜ்தானி ரயில்கள் எல்எச்பி (LHB) பெட்டிகளுடன் நவீனப்படுத்தப்பட்டுப் பயணிகளுக்குத் தொடர்ச்சியாக வசதியான அனுபவத்தை வழங்கி வருகின்றன.
பகல் நேரத்தில் வேகமாகவும் நவீன வசதிகளுடனும் பயணிக்க விரும்பிகளுக்கு வந்தே பாரத் சிறந்த தேர்வாக இருக்கும் வேளையில், நீண்ட தூர இரவு நேரப் பயணங்களுக்குப் படுத்து உறங்கிச் செல்ல ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இன்றளவும் பயணிகளின் முதன்மைத் தேர்வாக விளங்கி வருகிறது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.