Times of Puducherry

பள்ளிக்குள் மாணவிக்கு கூட்டு பாலியல் தொல்லை.! வாய்கிழிய வசனம் பேசிய முதலமைச்சர் எங்கே? உதயநிதி கேள்வி.!

எழுதியவர்: Ramprasath S
1 நிமிட வாசிப்பு
25 Sep 2026 • 5:46 PM
udhayanidhi stalin condemns harassment case involving schoolgirl in chengalpattu

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகே கண்டிகையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “சிங்கப்பெண் படை எங்கே? பெண்கள் பாதுகாப்பில் அண்ணனா இருப்பேன் – அரணா இருப்பேன் என்று வாய்கிழிய வசனம் பேசிய முதலமைச்சர் எங்கே? சென்னை வண்டலூர் அருகே அரசுப்பள்ளி மாணவியை மர்ம நபர்கள் சிலர் பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் இருந்தே கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பெண்கள் பாதுகாப்பில் No compromise என்று சொல்லிக்கொள்ளும் Dummy முதலமைச்சரின் Circus ஆட்சியில், அரசுப்பள்ளி வளாகத்திலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வெட்கக்கேடு. மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக முதலமைச்சர் வருகிறார் என்று சொல்லி, இந்த சம்பவத்தை காவல்துறையும் – அதிகாரிகளும் மூடி மறைக்க முயற்சி செய்வதும் – பாம்புக்கடி என்று மடைமாற்றுவதும், தமிழ்நாடு எவ்வளவு மோசமானவர்கள் கைகளில் சிக்கி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

குற்றவாளிகளைப் பிடிக்க வக்கின்றி பாதிக்கப்பட்ட பெற்றோரின் செல்போன்களை கைப்பற்றி இந்த சம்பவம் குறித்து பொது வெளியில் பேசக்கூடாது என்று போலீஸ் தரப்பில் மிரட்டல் விடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த Reels ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கு, குற்றவாளிகளுக்கு கூடுதல் தைரியத்தை அளிப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களை மேலும் சித்திரவதை செய்வது போல் இருக்கிறது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு அவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். 

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அரசுப்பள்ளி உட்பட அனைத்துப்பள்ளி வளாகங்களிலும் பிள்ளைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். இடைத்தேர்தல் வருகிறது என்று இந்த கொடுமையை மூடி மறைக்க முயற்சித்தால், மக்கள் இந்த ஆட்சியாளர்கள் முகத்தில் கரியை பூசுவது உறுதி” என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆனால் இந்த புகாரை தாம்பரம் காவல்துறை மறுத்துள்ளது. தாம்பரம் காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” 24.09.2026 அன்று, தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட கண்டி கை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் குழந்தை பாலியல் துன்புறுத்தல் தொடர்பானதாகக் கூறப்படும் ஒரு சம்பவம் குறித்து புகார் பெறப்பட்டது. புகார் கிடைத்த உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு, மூத்த பெண் காவல் அதிகாரிகளின் மேற்பார்வையில், பெண் காவல் ஆய்வாளர் மூலம் துரிதமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையின் போது, தொடர்புடைய அனைத்து ஆதாரங்களும் உடனடியாக சேகரிக்கப்பட்டு, கவனமாக சரிபார்க்கப்பட்டன. பள்ளி வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கப்பெற்ற கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், இவ்விவகாரத்துடன் தொடர்புடைய சாட்சிகளிடம் விரிவாக விசாரணை நடத்தப்பட்டது. கிடைக்கப்பெற்ற பிற அறிவியல் மற்றும் உறுதிப்படுத்தும் ஆதாரங்களும் கவனமாக ஆய்வு செய்யப்பட்டன.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும், சம்பந்தப்பட்ட குழந்தையின் வாக்குமூலம் மற்றும் சேகரிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும், புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி அரசு பள்ளியில் அத்தகைய சம்பவம் நடைபெற்றது என்பதை உறுதிப்படுத்தும் எந்தவொரு ஆதாரமும் இந்நிலையையில் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. எனினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேற்கண்ட தகவல்களை கருத்தில் கொண்டு, குழந்தையின் நலன் கருதி, சரிபார்க்கப்படாத தகவல்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top