Times of Puducherry

'விஜய் தான் அடுத்த பிரதமர்' என சொன்னவர்: த.வெ.க எம்.எல்.ஏ கனிமொழிக்கு புதிய பொறுப்பு

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
11 Sep 2026 • 11:05 AM

தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில், 'இன்றைய முதல்வர் விஜய் தான் நாளைய பிரதமர் வேட்பாளர்' என்று அவர் கூறியிருந்தார்.

கோவை நரசிம்ம நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் கனிமொழி சந்தோஷ். இளங்கலை சட்டப்படிப்பு முடித்தவர். ஜோதிடத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். டைல்ஸ் மற்றும் கிரானைட் தொழில், பிசியோதெரபிஸ்ட், வாஸ்து நிபுணர் எனப் பன்முக அடையாளங்களைக் கொண்ட இவருக்கு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ் உள்ளனர்.

ஜோதிடம் மூலம் புற்றுநோயைக் குணப்படுத்தலாம் என கனிமொழி சந்தோஷ் பேசிய பழைய வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கவுண்டம்பாளையம் தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்ட கனிமொழி சந்தோஷ் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இந்நிலையில், இவர் அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, "இன்றைய முதல்வர் விஜய் தான் நாளைய பிரதமர் வேட்பாளர், ராகுல் காந்தியே விஜய்யை பிரதமர் நாற்காலியில் அமர வைப்பார்" என்று கூறியிருந்தார். இந்த நிலையில், எம்.எல்.ஏ கனிமொழிக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக த.வெ.க எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் தனது சமூக வலைதள பக்கத்தில், "தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் புதிய பொறுப்புக்கு நன்றி தெரிவித்து கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக என்னைத் தேர்வு செய்து, கூடுதல் பொறுப்பு வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களுக்கும், மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு. ஜே.சி.டி பிரபாகர் அவர்களுக்கும் எனது மரியாதையுடன் கூடிய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்தின் மாண்பை முன்னிறுத்தி செயல்படுவதற்கான மற்றுமொரு வாய்ப்பாக இந்தப் பொறுப்பை கருதுவதாகவும், சட்ட விதிகள் தொடர்பான முக்கிய விவகாரங்களை பொறுப்புணர்வுடன் அணுகி, சட்டப்பேரவை செயல்பாடுகளின் சிறப்பை வலுப்படுத்தும் வகையில் தனது பங்களிப்பை வழங்குவேன் என்றும் தெரிவித்துள்ளார். தனக்கு வழங்கப்பட்டுள்ள இந்தக் கூடுதல் பொறுப்பை முழு அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் நிறைவேற்றி முன்னெடுத்துச் செல்வேன் என்றும் கனிமொழி சந்தோஷ் உறுதியளித்துள்ளார்." என்று கூறியுள்ளார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top