Times of Puducherry
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், விஜய் தலைமையிலான த.வெ.க கட்சி 108 இடங்கள் பிடித்து தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்நிலையில், பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில் தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ், த.வெ.க-விற்கு ஆதரவு அளித்தது. தொடர்ந்து இடதுசாரிகள் கட்சி, வி.சி.க, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்தது.
தொடர்ந்து பெரும்பான்மை பெற்ற த.வெ.க, தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தது. முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற நிலையில் திருச்சி கிழக்கில் ராஜினாமா செய்தார். தொடர்ந்து, அ.தி.மு.க-வில் இருந்து பல எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்தனர்.
இப்படி தமிழ்நாட்டில் மொத்தம் 7 தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த நீதிமன்றம் தற்காலிக தடை விதித்திருந்த நிலையில், தற்போது மதுராந்தகம், தாராபுரம் 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதிகளில் த.வெ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து கட்சித் தலைமை குழப்பத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மதுராந்தகம் (தனி) தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வென்று, எம்.எல்.ஏ பதவியை ராஜிநாமா செய்திருக்கும் மரகதம் குமரவேல், த.வெ.க-வில் இணைந்துவிட்டார்.
அவர் மீண்டும் எம்.எல்.ஏ பதவி அல்லது கட்சிப் பதவியை கோரியிருக்கும் நிலையில், அவருக்கு மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதா? அல்லது மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க-வில் போட்டியிட்டு இரண்டாம் இடம்பிடித்த எழில் கேத்ரினுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவதா? என்ற குழப்பம் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க-விலிருந்து வந்தவருக்கு வாய்ப்பு வழங்கினால், இத்தனை நாள்கள் த.வெ.க-வில் பணியாற்றியவர்கள் அதிருப்தி அடையாளம் என்று ஒரு தரப்பும், மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க பலம் வாய்ந்திருக்கிறது என்பதால், மீண்டும் மரகதம் குமரவேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் என மற்றொரு தரப்பு கூறுவதால் யாருக்கு வாய்ப்பு வழங்குவது என ஆலோசிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற சத்யபாமா, பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்திருக்கும் நிலையில், அவருக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கலாமா அல்லது த.வெ.க-வினர் வேறு யாருக்காவது வாய்ப்பு வழங்கலாமா என்றும் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது. முதல்வர் விஜய் லண்டன் செல்லவிருப்பதால், இன்று இரவுக்குள், இரு தொகுதிகளுக்கான த.வெ.க வேட்பாளர்களையும் இறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.