Times of Puducherry
பெண்களின் உடல் வயதுக்கு ஏற்ப பல அத்தியாவசிய மாற்றங்களைச் சந்திக்கிறது. குறிப்பாகப் பிரசவத்திற்குப் பிறகு பெண்களின் உடலில் கால்சியம் சத்தின் அளவு கணிசமாகக் குறைந்து, எலும்புகள் பலவீனமடையத் தொடங்குகின்றன.
பொதுவாக, பெரும்பாலான பெண்கள் ஆரம்பக்கால உடல்நலப் பிரச்சனைகளைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் புறக்கணிப்பது வழக்கமாக உள்ளது. ஆனால், 30 வயதிற்குப் பிறகு உடலில் ஏற்படும் கால்சியம் குறைபாட்டை கவனிக்க தவறினால், அது ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis – எலும்பு அடர்த்தி குறைதல் நோய்) என்ற தீவிர நிலைக்கு வழிவகுக்கும்.
கால்சியம் குறைபாட்டின் 5 முக்கிய அறிகுறிகள்
தசைப்பிடிப்பு & கடுமையான வலி : கால்கள், கைகள் மற்றும் பாதங்களில் திடீரென ஏற்படும் தசைப்பிடிப்பு இதன் முதல் அறிகுறியாகும். முக்கியமாக நடக்கும்போதோ அல்லது இரவில் தூங்கும்போதோ தொடைகளிலும் கால்களிலும் கடுமையான இறுக்கமும் வலியும் ஏற்படும்.
அதிகப்படியான சோர்வு & தலைச்சுற்றல்
போதுமான அளவு உறங்கிய பிறகும் நாள் முழுவதும் உடலில் ஆற்றல் இல்லாமல் சோர்வாக உணர்வது. எலும்புகள் வலுவிழப்பதால் மூளையின் கவனம் சிதறுதல், சிந்திக்கும் திறன் குறைதல் மற்றும் தலைச்சுற்றல் போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்.
வறண்ட சருமம் – உடையும் நகங்கள்
நகங்கள் மிக எளிதாக உடைந்து போவது அல்லது அதில் வெள்ளை நிறத் திட்டுகள் தோன்றுவது மற்றும் சருமம் அதிகளவில் வறண்டு போவது.
பல் ஆரோக்கிய குறைபாடு
நமது உடலின் 99% கால்சியம் பற்கள் மற்றும் எலும்புகளில் தான் சேமிக்கப்படுகிறது. கால்சியம் குறையும் போது பற்களின் எனாமல் பலவீனமாகி, பற்சிதைவு, ஈறுகளில் வலி மற்றும் பற்கள் ஆடுதல் போன்றவை உண்டாகும்.
முதுகு வலி – அடிக்கடி எலும்பு முறிவு
சிறிய அடியினாலோ அல்லது தடுக்கி விழுவதினாலோ எலும்புகளில் முறிவு ஏற்படுவது, தொடர்ந்து கழுத்து மற்றும் கீழ் முதுகு வலி இருப்பது ஆஸ்டியோபோரோசிஸ் நோயின் தொடக்க அறிகுறியாகும்.
கால்சியம் சத்தைப் பெற என்ன சாப்பிட வேண்டும்?
பால், தயிர், பாலாடைக்கட்டி மற்றும் மோர் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பச்சை இலை காய்கறிகள்
கீரை வகைகள், வெந்தயக்கீரை, ப்ரோக்கோலி மற்றும் பருப்பு வகைகளில் அதிகளவில் கால்சியம் நிறைந்துள்ளது.
கொட்டைகள் – விதைகள்
எள் , சியா விதைகள் (Chia seeds), பாதாம் மற்றும் வால்நட்ஸ் போன்றவற்றை தினமும் சாப்பிட்டு வரலாம்.
வைட்டமின் டி முக்கியத்துவம்
உணவில் உள்ள கால்சியத்தை உடல் முழுமையாக உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி மிகவும் அவசியமானது. எனவே, தினமும் காலையில் 15 முதல் 20 நிமிடங்கள் மிதமான வெயிலில் நிற்பது நல்லது.
தவிர்க்க வேண்டியவை
காபி, டீ போன்ற காஃபின் நிறைந்த பானங்கள் மற்றும் உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பது, சிறுநீர் வழியாக கால்சியம் உடலை விட்டு வெளியேறுவதை அதிகரிக்கும். எனவே இவற்றைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகு 45 – 50 வயதைக் கடக்கும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் (Estrogen) ஹார்மோன் சுரப்பு குறைவதால் எலும்பு இழப்பு அசுர வேகத்தில் நடக்கும். இவர்கள் மருத்துவரின் ஆலோசனையோடு கால்சியம், வைட்டமின் டி3 சப்ளிமெண்ட்டுகளை எடுத்துக்கொள்வது எலும்பு முறிவைத் தடுக்கும்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.