Times of Puducherry

பாலியல் வழக்கில் அடுத்தடுத்து சிக்கும் தவெக நிர்வாகிகள் - முதலமைச்சர் விஜயை கடுமையாக சாடிய டிடிவி தினகரன்.!

எழுதியவர்: Ramprasath S
1 நிமிட வாசிப்பு
23 Sep 2026 • 2:38 PM
ttv dinakaran criticizes cm vijay over sexual allegations on tvk functionaries

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் அடுத்தடுத்து சிக்கும் தவெக நிர்வாகிகள் – பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் “No compromise” என்று சொன்ன முதலமைச்சர், தனது கட்சி நிர்வாகிகளுக்கு மட்டும் “Compromise” ஆகிவிடுகிறாரா? என டிடிவி தினகரன் முதலமைச்சர் விஜயை கடுமையாக சாடியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை அசோக் நகரில் சாலையோர பிளாட்பாரத்தில் தங்கியிருந்த 65 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை என இருவேறு பாலியல் குற்றச் சம்பவங்களில் தவெக நிர்வாகிகள் ஈடுபட்டதாகவும், அதிலும் எட்டயபுரம் அருகே நடைபெற்ற பாலியல் குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய தவெக நிர்வாகியைத் தட்டிக்கேட்ட பொதுமக்களை, காவலர்கள் முன்னிலையிலேயே தவெகவினர் மிரட்டும் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சொல்லி தான் தவெக பெண் நிர்வாகிக்கு நடந்ததாக சொல்லப்படும் பாலியல் குற்றச்சாட்டு, அதே மாவட்டத்தில் தவெக மாவட்டச் செயலாளர் மற்றும் நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு என பல்வேறு பாலியல் குற்றச்சம்பவங்களில் தவெகவினர் மீது உரிய நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கத் தவறியதால், தவெகவினர் சுதந்திரமாக இக்குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் அதே நேரத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் “No compromise” என்று சொன்ன முதலமைச்சர், தவெகவினருக்காக மட்டும் “Compromise” செய்துகொள்கிறாரா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் நடைபெறும் ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்கும் ஒவ்வொரு காரணம் இருப்பதாக சட்டமன்றத்திலேயே சொன்ன முதலமைச்சர், தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரில் பெரும்பாலானோர் தவெக நிர்வாகிகள்தான் என்று எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு என்ன காரணம் சொல்லப் போகிறார்?

பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றச் சம்பவங்களுக்கு முக்கியக் காரணம், சமூகத்தில் வேரூன்றியுள்ள போதைப்பொருட்களின் பயன்பாடுதான் என்று சொல்லும் முதலமைச்சர், அதைத் தடுக்க தனது முதல் மூன்று கையெழுத்துகளில் ஒரு கையெழுத்தாகப் போட்டபோதிலும், இதுவரை அதை நடைமுறைக்குக் கொண்டு வராதது ஏன்?

அதேபோல், அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஒரு அமைச்சரே போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தபோது, அவர் மீது குறைந்தபட்ச விசாரணைகூட நடத்தாதது ஏன்? ஆகமொத்தத்தில் போதைத் தடுப்பு நடவடிக்கைகளிலும், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களிலும் எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்காத முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், “No compromise” என்று கூறுவது வெட்கக்கேடானது.

எனவே, பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் புகாருக்குள்ளான தவெக நிர்வாகிகள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிட தேவையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், தவெக தலைவரும் முதலமைச்சருமான திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்” என டிடிவி தினகரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top