Times of Puducherry
நாடு முழுவதும் தகுதியான ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பொது விநியோக திட்டத்தை சீரமைக்கவும், தகுதியில்லாத மற்றும் போலி ரேஷன் கார்டுகளை கண்டறிந்து நீக்கவும் மத்திய உணவு துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
குடும்ப அட்டைகள் முடக்கம்
இதன் ஒரு பகுதியாக, கடந்த 6 மாதங்களாக ஒருமுறை கூட ரேஷன் கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகளை நாளை முதல் தற்காலிகமாக முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால், நாடு முழுவதும் சுமார் 1.5 கோடி ரேஷன் கார்டுகள் முடக்கப்படும் என தெரிகிறது. இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு விளக்கம்
இந்த நிலையில், 6 மாதம் பொருட்கள் வாங்காத குடும்ப அட்டைகள் முடக்கம் என மத்திய அரசு அறிவித்த சூழலில், தமிழ்நாட்டில் இ.கே.ஒய்.சி (e-KYC) மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொருட்கள் வழங்குவது முடக்கப்படமாட்டாது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
எந்தவொரு குடும்ப அட்டைதாரருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை நிறுத்தவோ / தடை செய்யவோ கூடாது என அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் /உதவி ஆணையர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசு, 6 மாதங்களுக்கு மேல் நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வாங்காத முன்னுரிமை (PHH) குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவதை அக்டோபர் 1 2026 முதல் தற்காலிகமாக தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முன்னுரிமை குடும்ப அட்டை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களின் இ.கே.ஒய்.சி சதவீதம் 96.69% ஆகும். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் 10.05.2076 முதல் 02.08.2026, 08.08.2026, 09.08.2026, 29.08.2026, 19.09.2026 மற்றும் 76.09.2076 ஆகிய தேதிகளில் e-KYC சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்கள் மூலமாக, ஜூலை மாதத்தில் 95.44 சதவீதமாக இருந்த e KYC சரிபார்ப்பு, செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி அன்று 96.69 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்த சிறப்பு முகாம்களின் மூலமாக 4,49,663 முன்னுரிமை (PHH) மற்றும் AAY திட்டப் பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். எனினும், இ.கே.ஒய்.சி பணியினை மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள். நியாய விலைக்கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும்போது, கைவிரல்ரேகை /கண்கருவிழி சரிபார்ப்பின் மூலம் தங்களது இ.கே.ஒய்.சி தகவல்களை விரைந்து பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.